Home நாடு வேட்பாளர் நியமனங்களில் நஜிப் கையெழுத்து போட முடியாது: வழக்கறிஞர்

வேட்பாளர் நியமனங்களில் நஜிப் கையெழுத்து போட முடியாது: வழக்கறிஞர்

824
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவின் சட்டப்பூர்வ நிலை கேள்விக்குறியாகியிருப்பதால், பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் அம்னோ வேட்பாளர்கள் நியமனங்களில் அக்கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் கையெழுத்து போட முடியாது என வழக்கறிஞர் முகமது ஹனீப் கத்ரி அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

அம்னோ கட்சி சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதி செய்யும் படி அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கின்றனர்.

அவ்வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருப்பதாக மலேசியாகினி தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

16 அம்னோ உறுப்பினர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகமது ஹனீப் கத்ரி அப்துல்லாவும், முன்னாள் அம்னோ சட்டவல்லுநர் சைட் இப்ராகிமும் பிரதிநிதிக்கின்றனர்.

இந்நிலையில், வழக்கறிஞர் ஹனீபா கூறுகையில், “அம்னோ உச்ச மன்றம் மற்றும் தொகுதிகள், இன்று முதல் முடக்கப்படுகின்றன. மேலும் அம்னோ கிளைகள் மார்ச் 1-ம் தேதி முதல் முடக்கப்பட்டிருக்கின்றன.

“எனவே, அம்னோவின் நிலை கேள்விக்குறியாகியிருப்பதால், நஜிப்பால் வேட்பாளர் நியமனங்களில் கையெழுத்திட முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

அந்த 16 அம்னோ உறுப்பினர்களில் ஒருவரான கம்போங் பண்டான் அம்னோ கிளைத் தலைவர் சலிஹுதின் அகமட் காலிட் கூறுகையில், “கட்சியின் நிலை குறித்து சங்கங்களின் பதிவிலாகாவிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். இன்று வரை எனக்குப் பதில் கிடைக்கவில்லை.

“கடந்த 2013-ம் ஆண்டு முதல் கிளைத் தலைவராக இருந்து வருகின்றேன். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற வேண்டிய அம்னோ கிளைகளுக்கான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை என்பதால், எனது பதவி சட்டப்பூர்வமானது தானா? என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.