Home நாடு காப்பாரில் இந்திய வேட்பாளர் தான் வேண்டும் – பிகேஆருக்கு மக்கள் கோரிக்கை!

காப்பாரில் இந்திய வேட்பாளர் தான் வேண்டும் – பிகேஆருக்கு மக்கள் கோரிக்கை!

1282
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் இந்திய வேட்பாளருக்குப் பதிலாக, டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமீத் என்ற மலாய் வேட்பாளரை பிகேஆர் கட்சி நிறுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து, சுமார் 50-க்கும் மேற்பட்ட பிகேஆர் ஆதரவாளர்கள் இன்று புதன்கிழமை காப்பார் பிகேஆர் அலுவலகம் முன்பு ஒன்று கூடினர்.

பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், பிகேஆர் கட்சிக்கு வாக்களிக்கமாட்டோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

பிகேஆர் கட்சியின் கீழ்மட்டத் தலைவர்களில் ஒருவரான ஜி.கலைச்செல்வன் இது குறித்துக் கூறுகையில், “மலாய் வேட்பாளரை நிறுத்துவதில் பிரச்சினை இல்லை ஆனால் இந்தப் பகுதியில் நிறைய கோயில்கள் இருக்கின்றன. மலாய் வேட்பாளர் எப்படி உள்ளே செல்வார்?”

#TamilSchoolmychoice

“அதேவேளையில் எங்களுக்கு மணிவண்ணனும் வேண்டாம் ஏனென்றால் எப்போதும் அவரது அலுவலகம் பூட்டியே தான் இருக்கிறது. அவர் தனது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பிகேஆர் உறுப்பினரான எம்.தமிழ்வனம் கூறுகையில், “இந்தியர்களின் பாரம்பரிய தொகுதியான காப்பாரில் 17,000 இந்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களின் சார்பில் மலாய் வேட்பாளரால் பிரதிநிதிக்க முடியாது. காப்பாரில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ் வாசிக்கத் தெரிந்தவராக இருந்தால் மட்டுமே இங்குள்ள இந்திய மக்களுக்கு சேவையாற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில், காப்பார் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட ஜி.மணிவண்ணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மஇகா வேட்பாளர் சக்திவேலை விட 23,790 வாக்குகள் பெரும்பான்மையில் மொத்தம் 69,849 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

எனினும், 14-வது பொதுத்தேர்தலில், தொகுதிகள் எல்லை சீர்திருத்தம் காரணமாக, 50 விழுக்காட்டிற்கும் மேல் மலாய்க்காரர்களைக் கொண்ட காப்பார் தொகுதியில் மலாய் வேட்பாளரை நிறுத்த பிகேஆர் முடிவெடுத்திருக்கிறது.

ஜி.மணிவண்ணனுக்கு இந்த முறை ஹூத்தான் மெலிந்தான் சட்டமன்றத்தை ஒதுக்கியிருக்கிறது.

இதனிடையே, தேசிய முன்னணி சார்பில், மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் மோகனா முனியாண்டி காப்பார் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.