Home தேர்தல்-14 சபா: 17 நாடாளுமன்றங்கள் – 45 சட்டமன்றங்களில் ஷாபி அப்டாலின் வாரிசான் போட்டி

சபா: 17 நாடாளுமன்றங்கள் – 45 சட்டமன்றங்களில் ஷாபி அப்டாலின் வாரிசான் போட்டி

890
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – வழக்கமாக தேசிய முன்னணியின் வாக்கு வங்கி என வர்ணிக்கப்பட்டு வந்த சபா மாநிலம் இந்த முறை பல்முனைப் போட்டிகளை எதிர்நோக்கப் போகும் கடுமையான போர்க்களமாக உருமாறியுள்ளது.

அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் தேசிய முன்னணியை சபா மாநிலத்தில் வீழ்த்திக் காட்ட கங்கணம் கட்டிக் கொண்டு தனது வாரிசான் கட்சியின் மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சபா மாநிலத்தில் உள்ள கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதியான லாபுவான் உட்பட 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் களமிறங்கும் வாரிசான் 45 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

#TamilSchoolmychoice

தனது பாரம்பரியத் தொகுதியான செம்பூர்ணாவில் மீண்டும் போட்டியிடும் ஷாபி அப்டால், செனாலிங்கான் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். செம்பூர்ணாவின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிதான் செனாலிங்கான் ஆகும்.

தேசிய முன்னணியின் வேட்பாளர் நசிர் சக்காரான் ஷாபி அப்டாலுக்கு எதிராக செம்பூர்ணா நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்படுகிறார். இவரும் ஷாபி அப்டாலின் பங்காளி முறை நெருங்கிய உறவினராவார்.

சபா மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளும் 60 சட்டமன்றத் தொகுதிகளும் இருக்கின்றன. லாபுவான் நாடாளுமன்றத் தொகுதியும் சபா மாநிலத்தில்தான் அமைந்திருக்கிறது என்றாலும், அது கூட்டரசுப் பிரதேச நாடாளுமன்றத் தொகுதியாகும். லாபுவானையும் சேர்த்தால் சபாவில் 26 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.

வாரிசான், பிகேஆர், ஜசெக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து சபாவில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.