Home தேர்தல்-14 ரந்தாவ் சர்ச்சை: ஸ்ரீராம் சின்னசாமி வழக்கு தொடுக்கிறார்!

ரந்தாவ் சர்ச்சை: ஸ்ரீராம் சின்னசாமி வழக்கு தொடுக்கிறார்!

1226
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல்களுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்குள்ளாக, நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் வெற்றி அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு விட்டது.

இந்த விவகாரத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக வேட்புமனுத் தாக்கல் செய்வதிலிருந்து தடுக்கப்பட்ட பிகேஆர் வேட்பாளர் ஸ்ரீராம் சின்னசாமி அறிவித்திருக்கிறார்.

முகமட் ஹானிப் கத்ரி அப்துல்லா

ஸ்ரீராமின் வழக்கறிஞர் முகமட் ஹானிப் கத்ரி அப்துல்லா இதுகுறித்த கடிதம் ஒன்றை தேர்தல் ஆணையத்திடமிருந்து தான் பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 30-ஆம் பல்வேறு விளக்கங்கள் கேட்டு ஸ்ரீராம் சார்பாக தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு தேர்தல் ஆணையத்தின் மாநிலத் தலைமையகமும், புத்ரா ஜெயாவிலுள்ள தலைமை அலுவலகமும் பதில் ஏதும் அனுப்பாமல் மௌனம் சாதித்து வரும் நிலையில், ரந்தாவ் தொகுதியின் தேர்தல் வெற்றி அரசாங்கப் பதிவேட்டில் பதிவேற்றம் கண்டிருக்கிறது என்றும் ஹனிப் காத்ரி தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெற்றுவிட்டதைத் தொடர்ந்து அடுத்த 21 நாட்களுக்குள் தேர்தல் குறித்த முறையீடு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனைச் செய்வோம் என்றும் ஹனிப் காத்ரி அறிவித்திருக்கிறார்.

ரந்தாவ் சட்டமன்றத்திற்கான தேர்தல் வெற்றி முறையீடு மட்டுமின்றி, அரசியல் சாசனத்தின் கீழ் ஸ்ரீராமின் உரிமைகள் குறித்த வழக்கும், அவர்  வேட்புமனுவை சமர்ப்பிப்பதிலிருந்து தடுத்தது தொடர்பான வழக்குகளும் அடுத்த வாரம் தொடுக்கப்படும் என்றும் ஹனிப் காத்ரி அறிவித்திருக்கிறார்.