Home தேர்தல்-14 சபா: பிபிஆர்எஸ் கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகியது

சபா: பிபிஆர்எஸ் கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகியது

996
0
SHARE
Ad
ஜோசப் குருப் – பிபிஆர்எஸ் கட்சியின் தலைவர்

கோத்தா கினபாலு – 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதல் சபாவில்தான் சுவாரசியமான, பரபரப்பான அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு (11 மே) பிபிஆர்எஸ் என்று அழைக்கப்படும் பார்ட்டி பெர்சாத்து ராயாட் சபா தேசிய முன்னணியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தது.

சபா மாநிலத்தில் தேசிய முன்னணியில் இருந்து விலகும் மூன்றாவது கட்சி பிபிஆர்எஸ் ஆகும். ஏற்கனவே, எல்டிபி, உப்கோ ஆகிய இரண்டு கட்சிகளும் தேசிய முன்னணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

பிபிஆர்எஸ் முடிவை நேற்று அறிவித்த அதன் தலைவர் டான்ஸ்ரீ ஜோசப் குருப் தேசிய முன்னணியிலிருந்து விலகும் அதே வேளையில் தனது கட்சி பக்காத்தான் கூட்டணியில் இணைய விண்ணப்பித்துள்ளது என்றும் அறிவித்தார்.

மக்களுக்கான எங்களின் சேவைகளைத் தொடர பக்காத்தான் கூட்டணியில் இணைவதாகவும், இன்னும் தேசிய முன்னணியில் நீடித்தால், தனது கட்சியால் மக்கள் சேவை ஆற்ற முடியாது என்றும் அறிவித்த ஜோசப் குருப், தங்களின் முடிவு காரணமாக, சபா வாரிசான் கட்சியுடன் இணைந்து செயல்படப் போவதாகவும் அறிவித்தார்.

நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் சூக் சட்டமன்றத்திலும், பென்சியாங்கான் நாடாளுமன்றத்திலும் பிபிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றது.

பென்சியாங்கான் நாடாளுமன்றத்தில் ஜோசப் குருப்பின் மகன் ஆர்தர் குருப் வெற்றி பெற்றார்.

பிபிஆர்எஸ் முடிவைத் தொடர்ந்து, சபா சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பக்காத்தான் கூட்டணியின் மேலும் அதிகரிக்கிறது.