ஜாகர்த்தா – அரச மன்னிப்பு பெற்று சிறையிலிருந்து வெளியான பின்னர் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தா சென்றடைந்தார்.
அங்கு நடைபெறும் ‘இந்தோனிசிய மறுமலர்ச்சி’ (ரிபோர்மாசி) இயக்கத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அன்வார் கலந்து கொண்டார்.
மலேசியாவில் அன்வாரால் 1998-ஆம் ஆண்டில் மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, இன்று 20 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அந்த இயக்கத்தின் தாக்கத்தால் ஆட்சியை எதிர்க்கட்சிகள் கைப்பற்றியிருக்கின்றன.
ஏறத்தாழ அதே காலகட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனிசியாவில் அப்போதைய சர்வாதிகார அதிபர் சுகர்த்தோவை வீழ்த்துவதற்காக ரிபோர்மாசி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இயக்கம் அடுத்த சில ஆண்டுகளிலேயே சுகர்த்தோவை வீழ்த்தி நாட்டில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தது.
சுகார்த்தோவுக்கு அடுத்த அதிபராக ஹபிபி பதவியேற்றார்.
இந்தோனிசியா சென்ற அன்வார் இப்ராகிம் நேற்று ஹபிபியுடன் சந்திப்பு நடத்தினார். இந்தோனிசிய மறுமலர்ச்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.