கோலாலம்பூர் – கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்து 1 எம்டிபி தொடர்பான விசாரணையில் தனது வாக்குமூலத்தை வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று வியாழக்கிழமை காலை மணி 10.00-க்கு மீண்டும் வரவிருக்கிறார்.
தொடர்ந்து அவர் தனது வாக்குமூலத்தை இன்றும் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று புதன்கிழமை இரவு நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா நஜிப் இல்லம் வந்து அவரைச் சந்தித்தார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.
அன்வார் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத்தின் சார்பில் பிரதிநிதித்த ஷாபி அப்துல்லாவுக்கு 10 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப் வழங்கினார் என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.