புத்ரா ஜெயா – பிரதமராகப் பதவியேற்ற பின்னர் துன் மகாதீர் செல்லப் போகும் முதல் வெளிநாடு என்ற பெருமையை ஜப்பான் பெறவிருக்கிறது. எதிர்வரும் ஜூன் 11 மற்றும் 12-ஆம் தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் வருடாந்திர நிகழ்ச்சியான நிக்கெய் மாநாட்டில் கலந்து கொள்ள மகாதீர் ஜப்பான் செல்லவிருக்கிறார்.
இன்று வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே துன் மகாதீரை அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
1981-ஆம் ஆண்டில் மலேசியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றபோது “கிழக்கு நோக்கிப் பாருங்கள்” என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளின் மேம்பாட்டு முறையை மலேசியாவும் பின்பற்றும் என மகாதீர் அறிவித்தார்.
ஆனால், நாளடைவில் அடுத்தடுத்த பிரதமர்கள் இந்தக் கொள்கையைப் பெரிய அளவில் முன்னெடுக்கவில்லை.
இப்போது மீண்டும் மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மகாதீர் செல்லவிருக்கும் முதல் நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறுகிறது.
இதற்கிடையில் இன்று மலேசியாவுக்கான ஜப்பானியத் தூதர் மக்கியோ மியாகாவா மரியாதை நிமித்தம் மகாதீரை அவரது அலுவலகத்தில் சென்று கண்டார்.