கோலாலம்பூர் – ஆட்சி மாற்றத்தால் உருவாகியிருக்கும் புதிய மலேசியாவில் நெட்டிசன்ஸ் எனப்படும் வலைப் பதிவாளர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கமும், அதற்கேற்ப நடந்து கொள்ளும் பண்பும் அதிக அளவில் காணப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை (மே 24) மாமன்னரின் தாயாரைச் சந்திக்க கிளந்தான் தலைநகர் கோத்தா பாரு சென்ற துணைப் பிரதமர் வான் அசிசா மற்றும் அன்வார் இப்ராகிமுடன் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகளும் அரசாங்க தனி விமானத்தில் உடன் சென்றனர்.
அந்தப் புகைப்படங்கள் இணையத் தளங்களில் உலா வர, சில வலைப் பதிவாளர்கள், அரசாங்க அலுவல் காரணமாக செல்லும்போது, அதுவும் அரசாங்கத்தின் தனி விமானத்தில் செல்லும்போது, பிள்ளைகளையும் ஏன் அழைத்துச் சென்றீர்கள் – நஜிப் குடும்பத்தினர் பின்பற்றிய வழக்கத்தை நீங்களும் செய்யாதீர்கள் – என்ற தொனியில் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்த அன்வாரின் மகள் நுருல் இசா, மாமன்னரின் தாயார் தனது தாயார் வான் அசிசாவையும் குடும்பத்தினரையும் சந்திக்க அதிகாரபூர்வமாக அழைத்திருந்தார் என்றும் எனவே இது அதிகாரபூர்வ பயணம்தான் என்றும் விளக்கமளித்ததோடு, மற்றபடி விடுமுறைகளுக்கும், சொந்த அலுவல்களுக்கும் அரசாங்க விமானங்களைப் பயன்படுத்த மாட்டோம் – நஜிப் குடும்பத்தின் நடைமுறையைப் பின்பற்ற மாட்டோம் என உறுதியளித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து சிறையிலிருந்து விடுதலையான பின்னர் முதன் முறையாக நேற்று வெள்ளிக்கிழமை (மே 25) தனது சொந்த மாநிலமான பினாங்குக்குத் திரும்பிய அன்வார் இப்ராகிம் வழக்கமான வணிக விமானத்தில், தனியாகப் புறப்பட்டுச் சென்றார்.
அந்த புகைப்படங்களையும் தனது வலைத் தளங்களில் வெளியிட்டார்.