கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும் சிறந்த சட்ட அறிவாற்றல் கொண்டவருமான டோமி தோமஸ் (படம்) அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவரது நியமனம் சுல்தான்கள் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஒரு முஸ்லீம் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்பட சுல்தான்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், டோமி தோமசுக்குப் பதிலாக மற்றொரு பெயர் பரிந்துரைக்கப்பட சுல்தான்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டாலும், வேறு யாரையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை – டோமி தோமஸ் ஒருவர்தான் எங்களின் தேர்வு என பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலிக்குப் பதிலாக புதிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் முயற்சியில் பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.