கோலாலம்பூர் – அடுத்து வரும் ஆண்டுகளில் பல்வேறு முனைகளில் சட்டப் போராட்டங்களை எதிர்நோக்கப் போகும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அதற்காக ஆயத்தமாகி வருகிறார்.
அதற்கு முன்னோட்டமாக அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர் நிறுவனம் ஒன்றை தன்னைப் பிரதிநிதிக்க நியமித்திருக்கிறார். ஆஷ்குரோப்ட் சட்ட நிறுவனத்தை (Ashcroft Law Firm) நஜிப் தனது சார்பாக நியமித்திருக்கிறார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜோன் ஆஷ்குரோப்ட் தலைமையில் இந்த சட்ட நிறுவனம் இயங்கி வருகிறது. இவர் அமெரிக்காவின் முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞராவார் (அட்டர்னி ஜெனரல்).
1எம்டிபி விவகாரம் தொடர்பில் அமெரிக்க நீதித் துறையின் வழக்கு உட்பட அனைத்துலக அளவில் பல வழக்குகள் நஜிப்பை நோக்கிப் பாயக்கூடும் என்பதால் அமெரிக்காவின் சிறந்த, முன்னணி வழக்கறிஞர் நிறுவனத்தை நஜிப் நியமித்திருக்கிறார்.
இதுநாள் வரையில் பிரதமராக இருந்த காரணத்தால் அமெரிக்க வழக்குகளுக்கு எதிராக பிரதமர் என்ற முறையில் அரசதந்திர விதிவிலக்குகளைப் பெற்றிருந்த நஜிப்புக்கு இனி அதுபோன்ற தற்காப்பு கவசம் கிடைக்காது.
ஆஷ்குரோப் வழக்கறிஞர் நிறுவனம் தவிர டேவிட் போயிஸ் என்ற முன்னணி அமெரிக்க வழக்கறிஞரையும் நியமித்திருக்கிறார்.
மலேசியாவில் தனக்கு ஆதரவாக வழக்காட முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்குரைஞரான (சொலிசிட்டர் ஜெனரல்) டத்தோ முகமட் யூசோப் சைனால் அபிடின் தலைமையிலான வழக்கறிஞர் குழுவொன்றை நஜிப் ஏற்கனவே நியமித்திருக்கிறார்.