Home நாடு தேசிய முன்னணி: அன்று 13! இன்றோ வெறும் 4!

தேசிய முன்னணி: அன்று 13! இன்றோ வெறும் 4!

1156
0
SHARE
Ad

கோலாலம்பூர்- அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது இதுதான் போலும்!

மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்பாக 13 கூட்டணிக் கட்சிகளுடன் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக நாடு முழுவதும் பரவிக் கிடந்த தேசிய முன்னணி இன்று பெரும் பின்னடைவை எதிர்நோக்கி வெறும் 4 கட்சிகள் கொண்ட அரசியல் இயக்கமாக சுருங்கி விட்டது.

சுதந்திரம் கிடைத்த கால கட்டத்தில் ஒன்றிணைந்த அம்னோ, மசீச, மஇகா ஆகிய கட்சிகள் இன்னும் தேசிய முன்னணி கூட்டணியில் நீடிக்கின்றன. 1970-ஆம் ஆண்டுகளில் இணைந்த கட்சியான கெராக்கானும் நான்காவது உறுப்பியக் கட்சியாக இன்னும் நீடிக்கிறது.

#TamilSchoolmychoice

மே 9 பொதுத் தேர்தல் முடிந்தவுடனேயே அடுத்த நாளே – மே 10-ஆம் தேதியே – உப்கோ (UPKO) என்ற சபா கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவை அறிவித்தது. அதைத் தொடர்ந்து எல்டிபி (LDP) என்ற மற்றொரு சபா கட்சி தேசிய முன்னணியிலிருந்து விலகியது.

மடமடவென மலையே சரிவது அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக உறுப்பியக் கட்சிகள் தேசிய முன்னணியைக் கைவிடத் தொடங்கின.

பிபிஎஸ், பிபிஆர்எஸ் (PBS & PBRS) ஆகிய கட்சிகள் மே 12-ஆம் தேதி தேசிய முன்னணியைக் கைவிடும் முடிவை அறிவித்தன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தக் கட்சிகளெல்லாம் மே 9-க்கு முன்னர் தேசிய முன்னணிதான் மலேசியாவுக்கான விடியல் என்றும் நஜிப்தான் சிறந்த பிரதமர் என்றும் வாதிட்ட – பிரச்சாரம் செய்த கட்சிகள்!

மே 19-ஆம் தேதி மேற்கு மலேசியக் கட்சியான – கேவியஸ் தலைமையிலான மைபிபிபி கட்சியும் தேசிய முன்னணியிலிருந்து விலகியது. எனினும் யார் தலைமையிலான மைபிபிபி கட்சி அதிகாரபூர்வமானது என்ற சர்ச்சை நீடிப்பதால், கேவியசுக்கு எதிரணியாகச் செயல்படும் தலைவர்களும் தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, சரவாக் எங்களின் கோட்டை, என்றும் சிதறாத வாக்கு வங்கி என்றெல்லாம் தேசிய முன்னணி தலைவர்களால் புகழப்பட்ட சரவாக் மாநிலத்தின் தேசிய முன்னணியில் இருந்து நான்கு கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 12) விலகியுள்ளன.

பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து (PBB), சரவாக் யுனைடெட் பியூபல்ஸ் பார்ட்டி (SUPP), பார்ட்டி ராயாட் சரவாக் (PRS) மற்றும் பார்ட்டி டெமோக்ரோடிக் புரொக்ரெசிவ் (PDP) ஆகிய அந்த நான்கு கட்சிகளும் தேசிய முன்னணியில் இருந்து விலகி காபுங்கான் பார்ட்டி சரவாக் என்ற புதிய கூட்டணியைத் தோற்றுவித்திருப்பதாக சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபெங் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுடின் அம்னோவை மீண்டும் வலுவாக மறுநிர்மாணிப்பு செய்ய இது சரியான வாய்ப்பு என்று கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து சபாவைப் போல, சரவாக்கிலும் இனி அம்னோ நேரடியாக கிளைகள் அமைத்து செயல்படத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சுவாரசியம் என்னவென்றால், தேசிய முன்னணி என்பது முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்கால் 1974 பொதுத் தேர்தலுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட மாபெரும் கூட்டணியாகும்.

அன்று தந்தை விதைத்ததை இன்று மகன் நஜிப் சிதைத்திருப்பதுதான் விசித்திரம்!

-இரா.முத்தரசன்