மாஸ்கோ – இன்று வியாழக்கிழமை (ஜூன் 14) அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்க்க – கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் அங்கமான திறப்பு விழா நிறைவடைந்த பின்னர் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இரஷியாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன.
இன்று (ஜூன் 14) மலேசிய நேரப்படி இரவு 11.00 மணிக்கு இந்த ஆட்டம் அஸ்ட்ரோ மற்றும் டிவி 2 தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும்.
முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா விளையாடுவதன் காரணமாக, சவுதி அரேபியாவின் இளவரசர் சல்மான் இரஷியாவுக்கு வருகை தந்து திறப்பு விழாவில் கலந்து கொள்வதோடு, தனது சொந்த நாடு விளையாடும் முதல் ஆட்டத்தையும் கண்டு இரசிக்கவிருக்கிறார்.
இரஷியாவுக்கு அதன் முதல் ஆட்டம் பெரும் சவாலாக இருக்கும். சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தில் வென்று காட்ட வேண்டிய நெருக்கடிக்கு அந்நாடு ஆளாகியுள்ளது.
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் திறப்பு விழா சுமார் 30 நிமிடங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய நேரப்படி இரவு 9.00 மணியளவில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
32 நாடுகள் பங்கு பெறும் இப்போட்டிகளில் இரண்டாவது ஆட்டத்தில் எகிப்து – உருகுவே ஆகிய நாடுகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை வெள்ளிக்கிழமை ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும். அதே நாளில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மொரோக்கோ-ஈரான் ஆகிய நாடுகள் மோதுகின்றன.