கோலாலம்பூர், மார்ச் 29- டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் துணைவியாரும், கெஅடிலான் கட்சி தலைவருமான டத்தின்ஸ்ரீ வான் அஸிஸா சிலாங்கூரிலுள்ள சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பப்படுகிறது.
பெர்மாந்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 1999ஆம் ஆண்டு வெற்றி பெற்று அத்தொகுதியில் சேவையாற்றி வந்த டத்தின்ஸ்ரீ வான் அசிசா தன் கணவர் டத்தோஸ்ரீ அன்வார் போட்டியிட வழி செய்யும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2008ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
அவ்வாறு அவர் தனது பதவியை ராஜினிமா செய்ததால் 5 வருடக் காலத்திற்கு அவர் நாடாளுமன்ற பதவிக்கு போட்டியிட முடியாது. ஆனால் சட்டமன்றத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்பதால் அவர் சிலாங்கூரிலுள்ள ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பப்படுகிறது.
அவ்வாறு சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் போட்டியிட்டு வென்றால் வான் அசிசா நடப்பு மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட்டுக்கு பதிலாக மந்திரி புசாராக பதவியேற்கும் வாய்ப்பும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசாங்கத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றினால், சிலாங்கூரின் முக்கிய பிகேஆர் தலைவர்களான டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் மற்றும் அஸ்மின் அலி இருவரும் மத்திய அரசாங்க அமைச்சரவைக்கு செல்லும் வாய்ப்பிருப்பதால், சிலாங்கூர் மந்திரிபுசார் பதவியை வான் அசிசா ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.