டாக்கா – இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசத்திலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் முதன்மையான தகவல் ஊடக நிறுவனம் பிடி நியூஸ்24.காம் (bdnews24.com) என்பதாகும். ஆங்கிலம், வங்காளம் என இரு மொழிகளிலும் இந்த ஊடகம் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் மாநிலமான மேற்கு வங்காளத்திலும், அம்மாநிலத்துடன் எல்லையைக் கொண்டுள்ள அதன் அண்டை நாடாள வங்காள தேசத்திலும் சுமார் 250 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வங்காள மொழி பேசுகின்றனர். அவர்களுக்கென இணைய வழியாக செய்திகளை வழங்கத் தொடங்கப் பட்ட முதல் இணைய தளம் பிடிநியூஸ்24.காம்.
இந்த பிடிநியூஸ் ஊடகத்தின் தனிச் சிறப்புகளை, திறன் கருவிகளில் வெளிக் கொணருவதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறப்புக் குறுஞ்செயலி (Mobile App) வெளியிடப்பட்டது. செல்லியல் குறுஞ்செயலியின் வடிவமைப்பாளரும், மலேசியக் கணினி நிபுணருமான முத்து நெடுமாறன் இந்த பிடிநியூஸ் குறுஞ்செயலியையும் வடிவமைத்து உருவாக்கியிருந்தார்.
தற்போது பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகளுடன் முற்றிலும் புதிய வடிவத்திலும், உள்ளடக்கத்தோடும் முத்து நெடுமாறன் உருவாக்கியிருக்கும் பிடிநியூஸ் குறுஞ்செயலியின் 3-ஆம் பதிப்பை (Version 3.0) பிடிநியூஸ் நிறுவனம் பயனர்களுக்காக வெளியிட்டுள்ளது.
கூகுள் பயனர்களுக்காக அண்ட்ரோய்டு பதிகையாகவும், ஆப்பிள் கருவிகளுக்கான ஐஓஎஸ் பதிகையாகவும் வெளியிடப்பட்டிருக்கும் இந்த குறுஞ்செயலியை முற்றிலும் மறு சீரமைப்பு செய்து, தற்போது அண்ட்ரோய்டு, ஐஓஎஸ் என இரு தளங்களிலும் கிடைக்கப் பெறும் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி உருவாக்கியிருப்பதாக முத்து நெடுமாறன் கூறியிருக்கிறார்.
“இதன் வழி புத்தம் புதிய குறுஞ்செயலியாகத் திகழும் இதனை, பயனர்கள் எளிமையாகக் கையாண்டு, தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களுக்காக, தங்கள் விருப்ப மொழியில் இதற்குள் உலா வர முடியும்” என்றும் முத்து நெடுமாறன் தெரிவித்தார்.
வங்காளம், ஆங்கிலம் என இருமொழிகளிலும் செய்தி அறிவிக்கைகளைப் பெறும் வாய்ப்பை வழங்கும் அதே வேளையில், இந்த இரண்டு மொழிகளிலும் செய்திகளைத் தேடிக் கண்டெடுக்கும் வசதியும் இந்தச் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. வெளிவரும் செய்திகளை உடனுக்குடன் இந்தக் குறுஞ்செயலியைக் கொண்டே மற்றவர்களுடனும் நட்பு ஊடகங்களின் (social media) வழி பகிர்ந்து கொள்ளலாம்.
முற்றிலும் இலவச செய்திகள்
இதற்கிடையில் பிடிநியூஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் இது குறித்துக் கருத்துரைக்கையில், விளம்பரங்களின் ஆதரவோடு, இந்தக் குறுஞ்செயலியின் வழி செய்திகளை முற்றிலும் இலவசமாகத் தாங்கள் வழங்குவதாகக் கூறியிருக்கிறார்.
அதே வேளையில், விளம்பர இடையூறுகளின்றி செய்திகளைப் படிக்க விரும்புபவர்கள் ஒரு சிறிய கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் விளம்பரங்களின்றி செய்திகளைப் படிக்கும் அனுபவத்தைப் பெற முடியும்.
“தற்போது செய்திகள் படிப்பவர்களும், தகவல்களைப் பரிமாறிக் கொள்பவர்களும் பெரும்பாலும் கைப்பேசிகளின் வழியேதான் அதனை நிறைவேற்றுகின்றனர் என்பதால் புதிய குறுஞ்செயலி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
செல்லியல்.காம் இணைய ஊடகத்தை தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் நடத்தி வரும் செல்லியல் சென்டிரியான் பெர்ஹாட் எனும் மலேசிய நிறுவனம், முத்து நெடுமாறன் தலைமையில் உருவாக்கப்பட்ட தனது சொந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 2014-இல் பிடி நியூஸ் குறுஞ்செயலியை உருவாக்கியது.
இக்குறுஞ்செயலி, தற்போது முழுமையான அளவில் சீரமைக்கப்பட்டு, புதிய வசதிகளோடு வெற்றிகரமாக உலகம் எங்கும் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தக் குறுஞ்செயலியை http://bdnews24.mnewsapps.com என்ற தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
(பின்குறிப்பு: மேற்கண்ட தகவல்களோடு பிடிநியூஸ்24.காம் பதிவேற்றம் செய்திருக்கும் ஆங்கிலக் கட்டுரையைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்)