“மலேசியத் தமிழ் உலகில் தனித் தமிழ் வளர்ச்சிக்கு அமைதியாக அரும்பணியாற்றி வந்த இனிய இளவல், நற்றமிழ் ஆசிரியர், தலைமைத் தமிழ் ஆசிரியர், பேராக் மாநில கல்வி அலுவலக திணைக்கள அலுவலராக பணி ஓய்வு பெற்ற குழ.செயசீலனாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். கோலகங்சார் தமிழாசிரியர் குழந்தை அவர்களின் மகனாக கு.ஜெயசீலன் என்ற பெயரில் வாழ்வைத் தொடங்கிய அவர், கால ஓட்டத்தில் தமிழ்ப் பேராசான் பாவாணர் அவர்களின் தனித் தமிழ் உணர்வால் ஈர்க்கப்பட்டு, தனித் தமிழை தனது எழுத்திலும், பேச்சிலும், இறுதி வரை கடைப்பிடித்தார்” என குமரன் தனது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.


“முப்பது ஆண்டுகளாக அவருடன் நான் நெருக்கத்தைக் கொண்டிருந்தவன். பணி ஓய்விற்குப் பிறகு திங்கள் ஒருமுறையாவது அலைபேசி வழி அவருடன் தொடர்பு கொண்டு உரையாடுவது உண்டு. தனித் தமிழ் ஆர்வத்துடன் பாடாற்றி வந்த குழ.செயசீலனார் சித்தர் நெறி ஆய்வில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதன் காரணமாக அவரது நடை உடைகளிலும், பேச்சிலும், பெரும் மாற்றத்தைக் கண்டேன். நல்ல ஆசிரியர். தனித் தமிழ் பற்றாளர். அவரது மறைவு சமுதாயத்திற்கும் தனித் தமிழ் ஆர்வலர்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது” என்றும் குமரன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
“சமகால இளம் தமிழறிஞர்களை, தனித் தமிழ் ஆர்வலர்களை அடையாளங் காணுவோம் – அவர்களின் ஆற்றலையும் அறிவினையும் பயன்படுத்திக் கொள்வோம். இதுவே மறைந்த தமிழ்க் குன்றம் குழ.செயசீலனாருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகவும், சிறந்த இரங்கலாகவும் அமையும்” என்றும் குமரன் தெரிவித்திருக்கிறார்.