Home நாடு தமிழ்நாடு பாடநூலில் மலேசியா பாலமுருகனின் சிறுகதை

தமிழ்நாடு பாடநூலில் மலேசியா பாலமுருகனின் சிறுகதை

6576
0
SHARE
Ad
கே.பாலமுருகன்

சென்னை – தமிழ்நாடு 11-ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் ‘பேபி குட்டி’ சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில்  புதிய பாடத்திட்டத்திற்கான  மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத் தமிழ்’ அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய ‘பேபி குட்டி’ சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் பாடநூல் உருவாக்கக் குழுவில் இடம்பெற்ற மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.சீ.பன்னீர்செல்வம் தெரியப்படுத்தினார். இதுபோன்ற அரசு பாடநூலில் சேர்க்கப்படும் அயலக இலக்கியப் பிரிவில் இதுவே மலேசியவிற்கான முதல் சிறுகதை என்றும் அறியப்படுகின்றது.

இந்திய மொழிக்கதைகள், அயலகக் கதைகள் ஆகியவற்றை வாசித்து அறிந்து கொள்ளும் திறனை மாணாக்கர் மத்தியில் வளர்க்கவும் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பை உருவாக்கவும் சிறப்புத் தமிழ் பாடநூல் திட்டத்தில் இலக்கியப் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 2014-ஆம் ஆண்டில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுதிய ‘பேபி குட்டி’ சிறுகதை மிகுந்த கவனத்தைப் பெற்ற சிறுகதையாகும்.

#TamilSchoolmychoice

சிறுகதையின் சுட்டி: http://balamurugan.org/2016/09/25/சிறுகதை-பேபி-குட்டி/

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளருமான சினிமா வசனக்கர்த்தவான எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பாலமுருகனின் ‘பேபிக் குட்டி’ சிறுகதையைத் தமிழில் தான் வாசித்தக் கதைகளில் முக்கியமான கதை என்று தன் அகப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கதாகும்.

அதே சிறுகதை 2018-ஆம் ஆண்டு தமிழக அரசுப் பாடநூல் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் அச்சிறுகதையின் மீது வாசகர்களின் கவனத்தைக் குவிக்கின்றன.

ஜெயமோகன் கருத்து இடம் பெற்ற அகப்பக்கம்: https://www.jeyamohan.in/48659#.WyozyVUzaM8

மலேசிய இடைநிலைப்பள்ளிப் பாடநூலில் தமிழகத்தின் சிறுகதைகள் இடம் பெற்றிருப்பநு வழக்கமான ஒன்றாகும். அதைப் போன்று, தமிழகத்தின் அரசுப் பாடநூலில் முதன்முதலாக ஒரு மலேசிய சிறுகதை இடம்பெற்றிருப்பது – அதுவும் மலேசிய நவீனப் படைப்பாளி -கே.பாலமுருகனின் சிறுகதை சேர்க்கப்பட்டிருப்பது, அயலகத் தமிழின் மீது சமீபத்தில் தமிழகத்தில் குவிந்திருக்கும் வாசகக் கவனத்தின் விரிவாக்கத்தைக் காட்டுகிறது. இலக்கியம் மனித சமூகத்தின் அக வளர்ச்சிக்கும் அனுபவ வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றும்.

ஒரு குழந்தையின் மரணம் நிகழ்ந்திருக்கும் வீட்டில் வாழும் 92 வயது நிரம்பிய பேபி குட்டியின் ஒரு நாள் வாழ்க்கையைக் கே.பாலமுருகன் யதார்த்த நடையில் சித்தரித்திருக்கிறார். நம் சமூகத்தின் முதியவர்கள் மீதான புரிதலையும், குழந்தைமை என்பதன் மீது நமக்கிருக்கும் எண்ணங்களையும் கலைத்துப் போடுவதாக இச்சிறுகதையைப் பற்றி பலர் கருத்துரைக்கிறார்கள்.

கே.பாலமுருகன்

மலேசிய இலக்கியச் சூழலில் கடந்த 13 ஆண்டுகளாகத் தீவிர இலக்கியத்தில் படைப்பு, இதழியல் என இயங்கி வரும் மலேசிய இளம் படைப்பாளி கே.பாலமுருகன். அநங்கம் என்கிற சிற்றிதழை மூன்றாண்டுகள் நடத்தி பல இளம் படைப்பாளர்களை அறிமுகமும் செய்து வைத்தார். தற்சமயம் களம் என்கிற இலக்கிய இணைய இதழை ஒருங்கிணைத்து வருகிறார். சிறுகதை, நாவல், கவிதை, சினிமா என இதுவரை 11 இலக்கிய நூல்கள் எழுதியுள்ளார். மலேசியாவில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன் இலக்கியத்தில் கரிகாற் சோழன் விருது, எம்.ஏ இளஞ்செழியன் விருது, சி.கமலநாதன் விருது, சிறந்த கெடா மாநில எழுத்தாளர் விருது, சிறந்த சாதனை இளைஞன் விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார். தனது சொந்த இணையத் தளத்தில் எழுதி வரும் கே.பாலமுருகன் சினிமா மற்றும் இலக்கிய விமர்சகரும்கூட.