கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய இடைத் தரகராகச் செயல்பட்ட ஜோ லோவுக்குச் சொந்தமானது என நம்பப்படும் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்டு அதன் உள்ளே தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டன.
கேஎல்சிசி இரட்டைக் கோபுர வளாகத்தில் உள்ள இந்த ஆடம்பரக் குடியிருப்பின் மதிப்பு ஏறத்தாழ 3 மில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
அண்மையில் கைது செய்யப்பட்ட நஜிப் துன் ரசாக்கின் உதவியாளர் மூலமாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்து இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 4 மணி நேரம் இந்தக் குடியிருப்பில் சோதனைகள் நடத்தப்பட்டன.
100 ரிங்கிட் கட்டுக்கள் கொண்ட பணம் மற்றும் ஒரு சிறிய அலுவலகத்திற்கான தளவாடப் பொருட்கள் ஆகியவை இந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.