சிட்னி – அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, தற்போது ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் சைருல் அசார் உமார் துன் மகாதீருக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியில் உள்ள குடிநுழைவுத் துறையின் தடுப்புக் காவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சைருலை முன்னாள் அம்னோ தலைவரான கைருடின் அபு ஹசான் சந்தித்திருக்கிறார். கைருடினிடம் சைருல் மகாதீருக்கான கடிதத்தை வழங்கியிருக்கிறார்.
அடுத்த சில நாட்களில் அந்தக் கடிதத்தைத் தான் பிரதமரிடம் வழங்கவிருப்பதாக கைருடின் கூறியதாக பிரி மலேசியா டுடே இணைய ஊடகம் தெரிவித்தது.
அல்தான்துயா கொலை வழக்கில் நடப்பு பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக சைருல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அல்தான்துயாவின் தந்தை பிரதமரைச் சந்தித்ததைத் தொடர்ந்து அந்த மங்கோலிய அழகியின் கொலை வழக்கை மறு விசாரணை செய்ய மகாதீர் அனுமதித்துள்ளார்.