கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை பதவியேற்றிருக்கும் அமைச்சரவை உறுப்பினர்களோடு இதுவரையில் துன் மகாதீரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
மலேசிய வரலாற்றில் இது ஒரு பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. இதுவரையில் அதிக பட்சமாக 2 அமைச்சர்களை மட்டுமே மத்திய அரசாங்கத்தில் இந்திய சமூகம் கொண்டிருக்கிறது.
ஆனால், துணையமைச்சர்கள் என்று வரும்போது ஒரே ஒரு துணையமைச்சரை மட்டுமே இந்திய சமூகம் பெற்றிருக்கிறது.
எதிர்பார்த்தபடி சில இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
13-வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நஜிப் துன் ரசாக் அமைச்சரவையில் ஒரே அமைச்சர் இடம் பெற்றிருந்தாலும் துணையமைச்சர்களாக மூன்று பேர் இடம் பெற்றிருந்தனர்.
மஇகாவின் சார்பில் எஸ்.கே.தேவமணி, எம்.சரவணன், பி.கமலநாதன் ஆகியோர் இடம் பெற்றிருக்க, மைபிபிபி கட்சியின் சார்பில் லோகா பாலமோகன் இடம் பெற்றிருந்தார்.
ஆக ஒரே நேரத்தில் 4 துணையமைச்சர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது ஒரே ஒரு துணையமைச்சர் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.
ஒரு காலகட்டத்தில் கெராக்கான் கட்சியின் சார்பில் டத்தோ கோகிலனும் துணையமைச்சராக பதவி வகித்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ஓர் அமைச்சர் இருந்த இடத்தில் தற்போது 3 அமைச்சர்களை இந்திய சமூகத்திற்கு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் வழங்கியிருப்பது சாதனையா?
அல்லது,
நான்கு இந்தியர்கள் துணையமைச்சர்களாக இருந்த மத்திய அரசாங்கத்தில் ஒரே ஒரு துணையமைச்சர் மட்டும் இடம் பெற்றிருப்பது இந்திய சமுதாயத்தின் இழப்பா?
உரியவர்கள் பதில் சொல்லட்டும்!