கோலாலம்பூர் – துன் மகாதீரின் அமைச்சரவையில் இடம் பெறவிருக்கும் அமைச்சர்கள் யார் என்ற ஆரூடங்கள் உலவி வந்த வேளையில், அடிக்கடி உச்சரிக்கப்பட்ட பெயர் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பி.வேதமூர்த்தியின் பெயராகும்.
14-வது பொதுத் தேர்தலில் இந்திய சமூகத்தின் வாக்குகளை நம்பிக்கைக் கூட்டணிப் பக்கம் கொண்டு வருவதற்கு முக்கியப் பங்காற்றியவர் வேதமூர்த்தி.
ஆனால், இன்றைய அமைச்சரவை நியமனங்களில் எதிர்பார்த்தபடி வேதமூர்த்திக்கு வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை.
எனினும் மேலும் சில அமைச்சர்கள் அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 29 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பர் என துன் மகாதீர் கோடி காட்டியிருக்கிறார். இன்றைய அமைச்சரவை உறுப்பினர்களோடு மொத்தம் 26 அமைச்சர்கள் பதவியேற்றிருக்கின்றனர்.
எனவே மேலும் 3 அமைச்சர்கள் நியமிக்கப்படக் கூடும் என ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்திருக்கின்றன.
மேலும் சில துணையமைச்சர்கள் நியமனங்களும் இதுவரையில் செய்யப்படவில்லை.
இன்னும் சிலர் புதிய நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி கூடிய பின்னர் செனட்டர்களாக நியமிக்கப்பட்டு அதன் பின்னர் அமைச்சர்களாகவோ, துணையமைச்சர்களகவோ நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.