Home நாடு ஊழல் தடுப்பு ஆணையம் சாஹிட்டிடம் 9 மணி நேரம் விசாரணை

ஊழல் தடுப்பு ஆணையம் சாஹிட்டிடம் 9 மணி நேரம் விசாரணை

1104
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை காலையில் புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் தலைமையகம் வந்தடைந்த அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி சுமார் 9 மணி நேரம் அங்கிருந்து தனது வாக்குமூலத்தை வழங்கினார்.

காலை 9.50 மணியளவில் வழக்கறிஞர் யாருமின்றி தனியாக பாதுகாவலர் ஒருவருடன் ஊழல் தடுப்பு ஆணையம் வந்த சாஹிட் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.

ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தன்னிடம் நிபுணத்துவ அணுகுமுறையோடு நடந்து கொண்டதாகத் தெரிவித்த சாஹிட் அதற்காக அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தனது வாக்குமூலத்தை வழங்கவிருப்பதாகவும் சாஹிட் மேலும் தெரிவித்தார்.

புகார்கள் என்ன?

தனது மனைவி மற்றும் தனது சொந்த கடன் பற்று அட்டை (கிரெடிட் கார்ட்) பாக்கிக் கட்டணத்திற்காக தனது குடும்பம் தொடர்புடைய ஓர் அறவாரியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தன்மீது கொண்டுவரப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து வாக்குமூலம் வழங்க அம்னோ தலைவராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அகமட் சாஹிட் ஹமிடி ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதுகுறித்துக் கருத்துரைத்த சாஹிட் இந்த விவகாரத்தில் தான் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளப்போவதாகவும், ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அறவாரியம் தானும் தனது நண்பர்களும் செலுத்திய நன்கொடைகளைக் கொண்டு இயங்குகிறது என்றும் சாஹிட் தெரிவித்தார்.

பல்வேறு அறப்பணிகளையும், இஸ்லாமிய விவகாரங்கள் சார்ந்த நற்பணிகளையும் அந்த அறவாரியம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

1997-இல் பதிவு செய்யப்பட்ட அந்த அறவாரியம் ஏழ்மை ஒழிப்புக்காக நிதிகளைப் பெறுவதற்கும் விநியோகிப்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.

மேலும், சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு வழங்கிய நன்கொடை தொடர்பில் சாஹிட், அந்த சவுதி அரச குடும்ப உறுப்பினரைச் சந்தித்த விவகாரம் தொடர்பிலும் விசாரிக்கப்படுகிறார்.

கடந்த 22 ஆகஸ்ட் 2015-ஆம் நாள் ஜோகூர், ஸ்ரீ காடிங் அம்னோ தொகுதி கூட்டத்தில் உரையாற்றும்போது நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 700 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடையை வழங்கிய சவுதி அரேபியா அரச குடும்ப உறுப்பினரை தான் சந்தித்திருப்பதாகத் சாஹிட் தெரிவித்திருந்தார்.