சிரம்பான் – கோலாலம்பூர், நீலாய், சிரம்பான் ஆகிய நகர்களுக்கிடையில் பயணிகளுக்கான மலாயன் இரயில்வேயின் (கேடிஎம்) வழிநில்லா விரைவு இரயில் சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை (ஜூலை 25) முதல் தொடங்கும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ பூக் (படம்) அறிவித்தார்.
அந்தோணி லோக் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
மக்களுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நம்பிக்கைக் கூட்டணி அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சேவை முதல் கட்டமாக வேலை நாட்களில் மட்டும் மேற்கொள்ளப்படும். காலையில் சிரம்பானில் இருந்து 7.08 மணிக்கு கோலாலம்பூர் நோக்கிப் புறப்படும் இந்த இரயில் வழியில் நீலாய் நகருக்கு 7.25 மணிக்கு வந்தடைந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 8.19 மணிக்கு கோலாலம்பூர் சென்ட்ரலை வந்தடையும். பின்னர் மாலையில் 5.55 மணிக்கு கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த இரயில் சேவை மாலை 6.50 மணிக்கு நீலாய் நகரை வந்தடைந்து, இரவு 7.10 மணிக்கு சிரம்பான் நகரை அடையும்.
இந்த சேவைக்கான கட்டணம் தற்போது இந்த நகர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட பழைய கட்டண விலையிலேயே இருந்து வரும்.