Home நாடு “தமிழ்ப் பள்ளிகளுக்கு தேவஸ்தானம் என்றும் துணை நிற்கும்” டான்ஸ்ரீ நடராஜா

“தமிழ்ப் பள்ளிகளுக்கு தேவஸ்தானம் என்றும் துணை நிற்கும்” டான்ஸ்ரீ நடராஜா

2191
0
SHARE
Ad

பத்துமலை – “இரண்டு தமிழ்ப் பள்ளிகளை தனது நேரடிப் பார்வையின் கீழ் நிர்வகித்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கும், தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வரும்” தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா (படம்) அறிவித்தார்.

2018-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதவிருக்கும் சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள  தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு வழிகாட்டி நூலையும், மற்ற பாடங்களுக்கான வழிகாட்டி நூல்களையும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தேவஸ்தானம் இலவசமாக வழங்கிய நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே நடராஜா இவ்வாறு அறிவித்தார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய செயலாளர் கு.சேதுபதி

கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 20-ஆம் தேதி பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியம் ஆலய வளாகத்திலுள்ள பொது மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் செயலாளர் கு.சேதுபதி (படம்) வரவேற்புரையாற்றினார்.

#TamilSchoolmychoice

“கடந்த ஆண்டும் இதே போன்று தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான சில நூல்களை நாங்கள் வழங்கினோம். இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான அனைத்துப் பாடங்களுக்குமான நூல்களை வழங்க தேவஸ்தான் முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் நடராஜா தனதுரையில் தெரிவித்தார்.

சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், அந்தப் பள்ளிகளின் பிரதிநிதிகளும் நேரடியாக நிகழ்ச்சிக்கு வருகை தந்து இந்த நூல்களைப் பெற்றுச் சென்றனர். வர இயலாத மற்ற பள்ளிகளுக்கு இந்த நூல்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் நடராஜா கூறினார்.

யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி

யுபிஎஸ்ஆர் தமிழ் மொழி பாடத்திற்கான இந்த நூல் 6 மாதிரி வினா விடைகளைக் கொண்டு ஒரு தேர்வு வழிகாட்டியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறது. கடந்த ஆண்டும் இதே நிறுவனம் 5 மாதிரி வினா-விடைத் தாள்களுடன் இதே போன்ற நூலைப் பதிப்பித்திருந்தது. கடந்த ஆண்டும் அந்த நூலை சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்கியது.

யுபிஎஸ்ஆர் தேர்வு வழிகாட்டி 2018 நூல் முகப்பு

தற்போது இந்த நூல் மேம்படுத்தப்பட்டு 6 மாதிரி வினா விடைகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை சிலாங்கூர் மாநிலத்தோடு, கூட்டரசுப் பிரதேச மாநிலப் பள்ளிகளுக்கும் இந்த நூலை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் இலவசமாக வழங்குகிறது.

சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இந்த நூல்களை இன்னும் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், அல்லது அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்தால், பத்துமலையில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 03-61896284