கோலாலம்பூர் – எஸ்.பி.எம். தேர்வில் நம் மாணவர்கள் பலரின் சிறந்த தேர்ச்சிக்குத் தமிழும் தமிழ் இலக்கியமும் முக்கியப் பாடங்களாய் அமைவதை மறுக்கவியலாது. இவ்வாண்டு எஸ்.பி.எம். தேர்வில், தமிழ்மொழி பாடத்திற்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் புதிய நூலாக ‘எஸ்.பி.எம். தமிழ்மொழி (தாள் 2) – தேர்வுக்களம்’ எனும் தேர்வு வழிகாட்டி வெளிவந்துள்ளது.
இதனை ஆசிரியர் ந.பச்சைபாலன் எழுதியுள்ளார்.நமது நாட்டில் கல்வித் துறையில் பணியாற்றிக் கொண்டே, கவிதை, சிறுகதை என எழுத்துப் பணிகளிலும் தனது தீவிரப் பங்களிப்பை வழங்கி வந்துள்ள பச்சை பாலன் விமர்சனத் துறையிலும், கவிதை ஆய்வுத் துறையிலும் தனி முத்திரை பதித்தவர். ஹைக்கூ கவிதைகள் குறித்து விரிவான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டவர் பச்சை பாலன்.
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் கற்பித்தலில் பல்லாண்டுகள் அனுபவமிக்க இவர் எழுதிய இரண்டு எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய நூல்கள் தற்பொழுது மாணவர்களுக்கு வழிகாட்டும் நூல்களாகப் பயன்பாட்டில் உள்ளன.
எஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழிப் பாடம், தாள் 2-இல் விடையளிக்கும் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் நோக்கத்தில் இந்நூல் வெளிவருகிறது. கேள்வி வாரியாக தலைப்புகள் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் விளக்கமும் மாதிரிக் கேள்விகள் – விடைகள் ஆகியவற்றோடு பயிற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக மாணவர்களின் சுயமுயற்சிக்கான பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. பெரும்பாலும் மாதிரித்தேர்வுத் தாள்கள் அடங்கிய பயிற்சி நூல்களைப் பெற்று விடையெழுதிய மாணவர்களுக்குக் கேள்வி வாரியான வழிகாட்டலும் பயிற்சியும் நிறைந்த பயனைத் தரும் என்பது உறுதி. ஆசிரியர் இன்றிப் பயிலும் மாணவர்களுக்கும் பயன்படும் நோக்கில் இஃது அமைந்துள்ளது.
தேர்வில் சிறந்த தேர்ச்சிக்கு விடாமுயற்சியும் தொடர்ப் பயிற்சியும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். மற்றத் தேர்வுப் பாடங்களில் எண்ணிறந்த பயிற்சி நூல்களும் மாதிரித் தேர்வுத் தாள்களும் உள்ளன. ஆனால், தமிழ்மொழி பயிலும் மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்புக் குறைவு. அந்தக் குறைநீக்க இந்த நூல் நிச்சயம் உதவும்.
மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் நிறைய படங்களோடும் அழகிய வடிமைப்பிலும் 276 பக்கங்களில் குறைந்த விலையில் இந்நூல் உருவாகியுள்ளது.