கோலாலம்பூர் – படத்தின் முதல் ஓரிரண்டு காட்சிகளிலேயே தெரிந்து விடுகிறது, இது ‘சூது கவ்வும்’ பாணியிலான நகைச்சுவை கலந்த திரைப்படம் என்பது. அதே பாணியில் இறுதி வரை படத்தைக் கொண்டு சென்று, திரையரங்கையே சிரிப்பு மழையால் கலகலப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் நெல்சன். முதல் படமாம்! அவரது உழைப்பும் அனுபவமும் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது – அல்லது தெறிக்கிறது.
இயக்குநரின் திரைக்கதைக்கும், படத்துக்கும் தூணாக நின்று ஒற்றை ஆளாகப் படத்தைத் தூக்கிப் பிடிப்பது நயன்தாராதான்!
எனினும், இயல்பான நம்பும்படியான சம்பவங்களினால் போதைப் பொருள் கடத்தும் கும்பலில் கோகிலாவாக வரும் நயன்தாரா சிக்கும் சுவாரசியம் போகப் போக குறைகிறது. அவரே இத்தனை விலாவாரியாக தனக்குத் தானே திட்டமிடுவதும், அத்தனை பெரிய கொள்ளைக் கூட்டத்தையே தொடர்ந்து ஏமாற்றுவதும் நம்பும்படி இல்லை. அவர் போதைப் பொருள் கும்பலில் சிக்குவது நம்பும்படி இருந்தாலும், அவருக்காக அவரது குடும்பமே தொடர் குற்றங்களில் ஈடுபடுவதும், போதைப் பொருள் கும்பலில் சிலரை நயனே கொலை செய்யத் தூண்டும் அளவுக்குப் போவதும் அவரது கதாபாத்திரத்தின் தன்மையையும், கௌரவத்தையும் சற்றே குறைக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
எனினும், அதையெல்லாம் மறந்து விட்டு சிரிக்கும்படி அடுக்கடுக்கான நகைச்சுவைகளைத் தோரணம் கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து நேரும் திருப்பங்களும் நம்மைப் படத்தோடு ஒன்ற வைத்து கட்டிப் போட்டு விடுகிறது.
கதாநாயகனே இல்லாத படத்தில் கதையின் நாயகனே யோகிபாபுதான். ஆனால், பின்னி எடுத்து விட்டார். அவரை முதல் காட்சியில் காட்டியதுமே ஏதோ சூப்பர் ஸ்டாரைக் காட்டிவிட்டது போல் கைதட்டுகிறார்கள் இரசிகர்கள். அவரும் ஏமாற்றவில்லை. அவர் வாய் திறந்து என்ன சொன்னாலும் அரங்கமே குதூகலித்துச் சிரிக்கிறது.
படத்தின் இன்னொரு சுவாரசியம் சின்னச் சின்ன கதாபாத்திரங்களையும் நன்கு உழைத்துச் செதுக்கியிருப்பது. அப்பளத்தை நொறுக்கித் தரும் வில்லனின் குள்ளமான கையாள், இன்னொரு வில்லனோடு சுற்றிக் கொண்டு வெடுக் வெடுக்கென்று கோபமாகப் பேசும் நீண்ட முடிவைத்த பையன், யோகிபாபுவோடு சேர்ந்து (நகைச்சுவைக்) கடை விரிக்கும் பலசரக்குக் கடைத் தொழிலாளி, மொட்டை இராஜேந்திரன் அவ்வப்போது அவிழ்த்து விடும் பழமொழிகள், நயன்தாராவின் தங்கையைக் காதலிக்கும் லொடலொடவென பேசும் பையன் – இப்படியாக நாம் நினைத்து நினைத்துப் பார்த்து சிரிக்கும்படியான கதாபாத்திரங்கள் படம் முழுக்க வருகின்றனர்.
இறுதிவரை எந்த ஒரு கதாநாயகனையும் காட்டாது, நயனை தனி ஆளாகவேக் காட்டியது இயக்குநரின் துணிச்சல். படத்துக்குத் துணை செய்யும் மற்றொரு அம்சம் அனிருத்தின் இசையும் பாடல்களும்! ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். ஒருகாட்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பின்னணிக் குரல் கொடுக்கிறார்.
மொத்தத்தில் நயன்தாரா – வித்தியாசமான திரைக்கதையோடு கூடிய இயக்கம் – படம் முழுக்க விரவி நிற்கும் நகைச்சுவை – ஆகிய அம்சங்களுக்காக – கோகோ எனப் பெயர் சுருக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படும் கோலமாவு கோகிலாவைக் கண்டிப்பாகப் பார்த்து இரசிக்கலாம்.