Home நாடு “இண்டர்நெட்டுக்குத் தமிழில் இணையம் என்று பெயர் வைத்தவர்!” – ஆதி.இராஜகுமாரனுக்கு முத்து நெடுமாறன் அஞ்சலி

“இண்டர்நெட்டுக்குத் தமிழில் இணையம் என்று பெயர் வைத்தவர்!” – ஆதி.இராஜகுமாரனுக்கு முத்து நெடுமாறன் அஞ்சலி

931
0
SHARE
Ad

Rajakumaran Photo Featureகோலாலம்பூர் – சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) காலை மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆதி.இராஜகுமாரன் மறைவு குறித்துத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக, அவரின் நீண்டநாள் நண்பரும், பல பணிகளில் அவருடன் இணைந்து பணியாற்றியிருப்பவருமான முத்து நெடுமாறன் கூறியுள்ளார்.

“ஆதி.இராஜகுமாரன் தமிழுக்கென கலைச் சொற்கள் உருவாக்குவதில் பெரும் ஆர்வம் காட்டியவர். இன்று தமிழின் முக்கியச் சொல்லாகத் தோன்றியிருக்கும் ‘இணையம்’ என்னும் சொல்லை உருவாக்கியவரும் அவரே!” என்று மறைந்த இராஜகுமாரன் குறித்துக் குறிப்பிட்ட முத்து நெடுமாறன், மேலும் பின்வருமாறு தொடர்ந்து தெரிவித்தார்:

“தொண்ணூறுகளின் தொடக்கத்தில், தமிழ்-நெட் என்னும் மடலாடற்குழுமத்தில் தமிழிலேயே மின்னஞ்சல் வழிக் கருத்தாடல்கள் நடந்து வந்தன. உலகத்தில் பலநாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துரையாடும் குழுமமாக அது திகழ்ந்தது. இணைய முன்னோடிகள் பலர் அந்தக் குழுமத்தில் இருந்தனர். ஆதி.இராஜகுமாரனும் அக்குழுவில் ‘கோ’ என்ற பெயரில் பங்கு கொண்டு தமது கருத்துகளைத் தெரிவித்து வந்தார். மின்னுட்பக் கலைச் சொற்கள் தமிழிலேயே இருக்கவேண்டும் என்று உறுதிபூண்டு செயல்பட்டு வந்த குழுமத்தினர், ‘இண்டர்ணெட்’ என்னும் சொல்லுக்குத் தமிழில் நல்ல சொல் ஒன்றைத் தேடிவந்தனர்”

முத்து நெடுமாறன்
#TamilSchoolmychoice

சில நாட்கள் கழித்து, என்னைத் தொலைபேசி வழி அழைத்து, ‘இண்டர்ணெட்டுக்கு’ நல்ல தமிழ்பபெயர் ஒன்றைத் தேடிக் கண்டுபிடித்துள்ளேன் என்றார். மிகுந்த ஆவலோடு என்ன சொல் என்று கேட்டேன். ‘இணையம்’ என்றார். அருமையான சொல்லாக இருக்கிறதே! இதுபோல வெல்லும் சொல் தேடுவது கடினம். நீங்களே குழுவில் பரிந்துரை செய்யுங்களேன் என்றேன். “நுட்பவியலாளர்கள் இருக்கும் குழு, நீங்கள் அறிமுகம் செய்தால் பொருத்தமாக இருக்கும் என்று எந்தவிதச் செறுக்கும் இல்லாமல், அவருக்கே உரிய பணிவுடன் கூறினார். பல சொற்கள் தோன்றினாலும், அவர் பரிந்துரைத்த ‘இணையம்’ என்னும் சொல்லே வெற்றி பெற்றது.” என்று கூறிய முத்து நெடுமாறன், ஏறக்குறைய அனைத்து உலக மொழிகளும் ‘இண்டர்நெட்’ என்றே கூறும் இந்தப் பெயர், தமிழில் மட்டும் இணையம் என்று விளங்குகிறது. ஆதி.இராஜகுமாரனின் பெயரும் நினைவுகளும் “இணையம்” என்ற சொல்லுடன் தொடர்ந்து இணைந்திருக்கும்.” என்று நன்றி உணர்வுடன் கூறினார்.

கையச்சு முறையால் அவதியுறும் அச்சகங்கள் கணினிப் பயன்பாட்டுக்கு மாறவேண்டும் என்று 80களில் முன்னோடியாக இருந்து உழைத்தவர் ஆதி.இராஜகுமாரன். மலேசிய நாளிதழ்களுக்கு இந்தப் புதிய வசதியினை அறிமுகப்படுத்த வேண்டும், அதிக அளவில் நாள், வார, மாத இதழ்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று அயராது பாடுபட்டவர் இராஜகுமாரன். குறிப்பாக முரசு அஞ்சல் மென்பொருள் எனது முயற்சியால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது, என்னை அவர் தம்பியும், அப்போதைய ‘தமிழ் ஓசை’ ஆசிரியருமான ஆதி.குமணனிடம் அழைத்துச் சென்று, தமிழ் ஓசை நாளிதழ் கணினி வழி அச்சிட்டு வெளிவந்தால் பல முன்னேற்றங்களைக் காண முடியும் என்று அதன் பயன்பாட்டைப் பரிந்துரை செய்தவர் இராஜகுமாரன்தான். இவரின் முயற்சியினாலே தமிழ் ஓசை கையச்சு முறையில் இருந்து மாறிக் கணினி அச்சு வழி வெளிவந்த முதல் மலேசியத் தமிழ் நாளிதழ் ஆனது. கணினி வழி மற்ற மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கைகள் அச்சிடப்படுவதற்கு புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியது” என்றும் இராஜகுமாரனின் தொண்டு குறித்து முத்து நெடுமாறன் நினைவு கூர்ந்தார்.

“ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாகவும், பணிவாகவும் பல தமிழ்ப் பணிகளை ஊடகத் துறையில் நடத்திக் காட்டியவர் இராஜகுமாரன். அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் உலகுக்கு ஏற்பட்ட அளப்பரிய இழப்பாகும். தனிப்பட்ட முறையில், எந்தவிதத் தங்குதடைகள் இல்லாமல், உரிமையோடு பேசும் ஓர் அருமை நண்பரை இழந்தேன்” என்றும் முத்து நெடுமாறன் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.