Home நாடு மஇகா மத்திய செயலவை கூடுகிறது – போர்ட்டிக்சனை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்குமா?

மஇகா மத்திய செயலவை கூடுகிறது – போர்ட்டிக்சனை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்குமா?

1294
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய  முன்னணி சார்பில் மஇகா போட்டியிட்ட போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத் தேர்தலை ஏற்படுத்தி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிட முன்வந்திருப்பதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக மஇகாவே மீண்டும் போட்டியிடுமா அல்லது அம்னோவுக்கு அந்தத் தொகுதியை விட்டுத் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் போர்ட்டிக்சன் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுப்பதா என்ற விவகாரம் விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய மத்திய செயலவைக் கூட்டம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி விவகாரத்துக்காக கூட்டப்படும் பிரத்தியேகக் கூட்டமல்ல. இந்த மத்திய செயலவைக் கூட்டம் சில நாட்களுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டதாகும்.

#TamilSchoolmychoice

எனினும், தற்போது எதிர்பாராதவிதமாக போர்ட்டிக்சன் தொகுதி குறித்த அன்வாரின் அறிவிப்பும் வெளியாகி இருப்பதாலும், அந்தத் தொகுதி தேசிய முன்னணி சார்பில் மஇகா போட்டியிட்ட தொகுதி என்பதாலும் இன்று கூடும் மத்திய செயலவை போர்ட்டிக்சன் குறித்து விவாதித்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர்ட்டிக்சன் – 14வது பொதுத் தேர்தல் முடிவுகள்

கடந்த பொதுத் தேர்தலில் மஇகா சார்பில் டத்தோ வி.எஸ்.மோகன் இங்கு போட்டியிட்டு தோல்வி கண்டார். பிகேஆர் சார்பாக டேன்யல் பாலகோபால் அப்துல்லா இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று புதன்கிழமை அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவார் என பிகேஆர் கட்சி அறிவித்திருக்கிறது.