Home நாடு முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகினார்

முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகினார்

922
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவின் முன்னாள் அனைத்துலக வாணிப, தொழிலியல் அமைச்சரும், நடப்பு ஜெலி (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினருமான முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகுவதாக அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற அம்னோ தேர்தலில் முஸ்தாபா முகமட் மிக அதிகமான வாக்குகளில் அம்னோ உச்சமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, அரசியல் வட்டாரங்களில் அவரது முடிவு எதிர்பாராத – அதிர்ச்சிகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

தனது 40 ஆண்டுகால சேவையோடு அம்னோவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருக்கும் முஸ்தாபா அம்னோ மீதான நம்பகத் தன்மை படுவீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், அதனைச் சரிசெய்ய மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அம்னோ மலாய் மக்கள், இஸ்லாம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமல்லாது அனைத்து இன மக்களையும் அரவணைத்தும், இணைத்துக் கொண்டும் செயலாற்ற வேண்டும் என்றும் அதுதான் தனது கொள்கை என்றும் அவ்வாறு தற்போது அம்னோ நடந்து கொள்ளவில்லை என்பதாலும் தான் அம்னோவிலிருந்து விலகுவதாகவும் முஸ்தாபா இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

14-வது பொதுத் தேர்தலில் 54 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற அம்னோவிலிருந்து தற்போது முஸ்தாபா உள்ளிட்ட 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளதால் அதன் நாடாளுமன்ற பலம் தற்போது 50-ஆக சுருங்கியுள்ளது.

மேலும் கிளந்தான் மாநிலத்தில் பாஸ் கட்சியின் செல்வாக்குக்கு எதிராக அம்னோவை வளர்ப்பதில் பெரும்பாடு பட்டவர் முஸ்தாபா முகமட். ஆனால், தற்போது அம்னோ அதே பாஸ் கட்சியுடன் நெருக்கம் பாராட்டுவது முஸ்தாபாவின் பதவி விலகலுக்கான காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.