தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் நடப்பு நியமன மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களிடையே பரவலான ஆதரவைப் பெற்றவராகக் கருதப்படும் சரவணனுக்குப் போட்டியிருக்காது என்றும் அவர் ஏகமனதாக துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் மஇகா வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவிய சூழ்நிலையில் இராமசாமி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அந்த வகையில் அடிமட்ட உறுப்பினர்களோடும், தொகுதித் தலைவர்களோடும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் காரணத்தாலும், மஇகாவில் நீண்ட காலம் தீவிரமாக இயங்கி வந்திருப்பதாலும், சரவணன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என சில மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனக்குப் போட்டி உருவாகியிருக்கும் சூழ்நிலையில் சரவணனும், அதனைச் சாதாரணமாகக் கருதாமல் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நாடு முழுமையிலும் தொகுதி வாரியாகவும், வட்டார வாரியாகவும் கிளைத் தலைவர்களையும் ஆதரவாளர்களையும் சரவணன் சந்தித்து வருகிறார்.
இதற்கிடையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் ஆதரவு யார் பக்கம் இருக்கும் என்ற ஆரூடங்களும் மஇகாவில் உலவத் தொடங்கியுள்ளன. தேசியத் தலைவருக்கான தேர்தலில் விக்னேஸ்வரனுக்குப் பகிரங்க ஆதரவு அளித்த சரவணனுக்கு அதன் பிரதிபலனாக விக்னேஸ்வரனும் பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ சரவணனுக்குத் துணைத் தலைவர் தேர்தலில் ஆதரவு அளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் மஇகாவில் நிலவுகின்றது.
மஇகா கட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் அக்டோபர் 10-ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.