இஸ்தான்புல் – சவுதி அரேபியாவுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி துருக்கியிலுள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் கொல்லப்பட்டதை சவுதி அரசாங்கம் ஒப்புக் கொண்டதை அடுத்து அவரது நல்லுடலை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கஷோகியின் நண்பர்கள் குழுவொன்று சவுதி அரசாங்கத்திற்கு இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளனர்.
கஷோகி மாயமானதைத் தொடர்ந்து மௌனம் காத்து வந்த சவுதி அரேபியா அவர் தூதரகத்தினுள் நடந்த கைகலப்பு காரணமாக எதிர்பாராதவிதமாக, தவறுதலாகக் கொல்லப்பட்டார் என தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.
கஷோகி கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ள வேளையில், சவுதி இதுவரையில் கஷோகியின் உடல் எங்கிருக்கிறது எனத் தெரிவிக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தை மூடி மறைத்துள்ளனர் என்று மட்டுமே சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதியின் விளக்கம் தனக்குத் திருப்தியைத் தரவில்லை எனச் சாடியுள்ளார்.
சவுதி அரசாங்கத்தின் விளக்கத்தை அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசித்து வருவதாக பிரிட்டனும் அறிவித்துள்ளது.