பீடோர் – நாளை சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் தேதி மலேசியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றுப் பாதையில் புதியதொரு சாதனை அத்தியாயம் தொடங்குகிறது.
மலேசியாவில் இயங்கும் தமிழ்ப் பள்ளிகள் அண்மையக் காலமாக அயல்நாடுகளிலும் போட்டிகள், கண்காட்சிகள் எனப் பங்கு பெற்று தமிழ்ப் பள்ளி மாணவர்களின் திறனை உலகறிய பரப்பி வரும் இந்த காலகட்டத்தில், உலகம் எங்கும் பள்ளிகளுக்கிடையில் கல்விப் பரிமாற்றம் நிகழ வேண்டும் என்பதை தங்களின் அடுத்த கட்ட இலக்காகக் கொண்டு கல்வி அமைச்சும் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இலண்டன் மாநகரில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும், பீடோரின் இயங்கிவரும் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும், இணையம் வழி கல்விப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதிய அத்தியாயத்தைத் தொடக்குகின்றன. அந்தத் தொடக்க நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை (அக்டோபர் 27) பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி வளாகத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறும் இதே நேரத்தில் இலண்டன் நேரப்படி நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியிலும் அந்தப் பள்ளியின் வளாகத்தில் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
இதன் மூலம் மலேசியாவுக்கு வெளியே உலகின் இன்னொரு நாட்டில் அமைந்துள்ள பள்ளி ஒன்றுடன் கல்விப் பரிமாற்றத்தில் ஈடுபடும் முதல் தமிழ்ப் பள்ளி என்ற பெருமையையும், சாதனையையும் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி நிகழ்த்தியிருக்கிறது.
பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.நற்குணன் கலந்து சிறப்பிப்பார். மேலும் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்துவதோடு, இணையம் வழியான கல்விப் பரிமாற்றத்திற்கான தொழில் நுட்ப ஆலோசகராகவும் செயல்படுவார்.
முத்து நெடுமாறன் முரசு அஞ்சல் மென்பொருளின் உருவாக்குநர் என்பதோடு, செல்லினம் குறுஞ்செயலியின் உருவாக்குநரும், செல்லியல் ஊடகத்தின் இணை தோற்றுநரும் ஆவார்.
அண்மையில் இலண்டனுக்கு வருகை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது முத்து நெடுமாறன் நண்பர்களின் அழைப்பின் பேரில் அந்நகரில் இயங்கும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளிக்கும் வருகை தந்தார். அதுகுறித்த செய்திகள் செல்லியல் ஊடகத்திலும் அப்போது விரிவாக இடம் பெற்றன.
அந்தச் செய்தியைத் தொடர்ந்துதான் அந்த இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளிக்கும் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளிக்கும் இடையிலான இணையம் வழியான கல்விப் பரிமாற்றத்திற்கான பொறி தனக்குத் தோன்றியதாகவும், அதற்கேற்ப பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும், குறிப்பாக அதன் தலைமையாசிரியர் பழனி சுப்பையாவும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அதன் பலனாகவே இணையம் வழியான கல்விப் பரிமாற்றத்திற்கான இந்த அனைத்துலக அளவிலான திட்டம் செயல் வடிவம் கண்டு நாளை தொடங்குகிறது என்றும் பேராக் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.நற்குணன் செல்லியலிடம் தெரிவித்தார்.
திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தர உதவி புரிந்த முத்து நெடுமாறனுக்கும் தனது நன்றியை சுப.நற்குணன் தெரிவித்துக் கொண்டார்.
இலண்டனில் இயங்கிவரும் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளி ஐரோப்பாவில் தோற்றம் கண்ட முதல் தமிழ்ப் பள்ளி என்ற பெருமையைப் பெற்றதாகும். இங்கு சுமார் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 15 ஆசிரியர்களைக் கொண்டு இந்த பள்ளி இயங்கி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் தாக்கத்தைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப் பள்ளிகளும் மற்ற நாடுகளின் பள்ளிகளுடன் இதே போன்ற இணையம் வழியான கல்விப் பரிமாற்றங்களுக்கான முயற்சிகளில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுவதாக சுப.நற்குணன் தெரிவித்தார்.