Home நாடு “தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

“தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை…தொடர்ச்சியில் இருக்க வேண்டும்” – முத்து நெடுமாறன் உரை

2815
0
SHARE
Ad
இணையம் வழி கல்விப் பரிமாற்ற நிகழ்ச்சியில் துன் சம்பந்தன் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி சுப்பையா, சுப.நற்குணன், முத்து நெடுமாறன்…

பீடோர் – கடந்த ஜூலை மாதத்தில் மலேசியாவின் கணினி நிபுணர் முத்து நெடுமாறன் இலண்டனுக்குத் தனிப்பட்ட வருகை ஒன்றை மேற்கொண்டிருந்தபோது அங்கிருந்த அவரது நண்பர்கள் குழாமின் மூலம் அழைப்பொன்று அவருக்கு விடுக்கப்பட்டது. ஐரோப்பாவின் முதல் தமிழ்ப் பள்ளி என்ற பெருமையுடன் இலண்டனில் இயங்கிக் கொண்டிருக்கும், திருவள்ளுவர் பள்ளிக் கூடத்திற்கு வருகை தந்து அங்கு தமிழ் போதிக்கப்படுவதையும், பிரிட்டனில் குடியேறிய தமிழர்கள் ஆங்கிலத்தின் தாக்கத்திற்கு இடையில் தமிழ் மொழியைத் தங்களின் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்ல எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்குமான அழைப்பு அது.

முத்து நெடுமாறன் 11 ஜூலை 2018-இல் இலண்டன் திருவள்ளுவர் பள்ளிக் கூடத்திற்கு வருகை தந்த நிகழ்ச்சி ஒரு செய்தியாக செல்லியலிலும் இடம் பெற்றது. ஆனால், அந்த வருகையும், அது தொடர்பான செய்தியின் தாக்கமும், பிரிட்டன் – மலேசியா என இரு நாடுகளிலும் இயங்கும் இரண்டு தமிழ்ப் பள்ளிகளை இணையம் வழியான கல்விப் பரிமாற்றம் என்ற புதிய தளத்திற்கு இட்டுச் செல்லும் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

11 ஜூலை 2018-ஆம் நாள் முத்து நெடுமாறன் இலண்டன் திருவள்ளுவர் பள்ளிக்கு வருகை தந்தபோது…

அந்த செல்லியல் செய்தியைக் கண்ணுற்ற பேராக் மாநிலத்தின் தமிழ்ப் பள்ளிகளுக்கான அமைப்பாளர் சுப.நற்குணன் தனது எண்ணத்தில் தோன்றிய ஒரு பொறியைச் செயல்படுத்த உடனே முத்து நெடுமாறனைத் தொடர்பு கொண்டு இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளிக்கும், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளிக்கும் இடையில் கல்விப் பரிமாற்றத் தொடர்பை ஏற்படுத்தித் தர முடியுமா என்று வினவ, முத்து நெடுமாறனும் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தந்தார்.

#TamilSchoolmychoice

குறிப்பாக ஏன் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி இணையம் வழியான கல்விப் பரிமாற்றத்திற்கு தேர்வானது என்பதற்கும் ஒரு பின்புலம் இருக்கிறது.

பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையா

கடந்த 2015-இல் மலேசியக் கல்வி அமைச்சு உருமாற்றுப் பள்ளித் திட்டத்தினைத் (Program Sekolah Transformasi TS25) தொடங்கியது. அதற்காக மலேசியாவில் உள்ள 100 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் இடைநிலைப்பள்ளி, தேசியப்பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி என 100 பள்ளிகள் இடம்பெற்றன. மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள் சார்பில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த உருமாற்றுப் பள்ளித் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 4 படிநிலைகளை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். 4ஆம் படிநிலையின் இறுதித் திட்டத்தில்தான் இணையம் வழி உலகத் தொடர்பு (Globally Connected) என்ற அம்சம் இடம்பெற்றுள்ளது. ஆக, முதல் மூன்று படிநிலைகளை வெற்றிகரமாச் செயல்படுத்தியுள்ள பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி, நான்காம் படிநிலையான உலகத் தொடர்பு என்ற அம்சத்தைச் செயல்படுத்தத் தயார் நிலையில் இருந்தபோதுதான் இலண்டன் திருவள்ளுவர் பள்ளியினுடனான இணையப் பரிமாற்றம் என்ற நிகழ்ச்சி செயல்வடிவம் காணத் தொடங்கியது.

இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலிருந்து…

கடந்த சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் நாள் இலண்டனில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியோடு இணையம் வழி கல்வித் தொடர்பை ஏற்படுத்தி பேராக், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி புதிய சாதனை படைத்துள்ளதன் மூலம் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, கல்வி அமைச்சின் திட்டத்திற்கு ஏற்ப, எல்லாப் படிநிலைகளையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ள ஒரே பள்ளியாக துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முத்து நெடுமாறன் உரை

அக்டோபர் 27-ஆம் தேதி ஒரே நேரத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலும் மலேசிய நேரப்படி மாலை 5.00 மணிக்கு பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியிலும் இந்த இணையம் வழியானக் கல்விப் பரிமாற்றத்தை முன்னிட்டு சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முத்து நெடுமாறன் உரையாற்றினார்.

மூத்த இலங்கை தமிழறிஞர் அமரர் கா.சிவத்தம்பியின் வாசகமான “தமிழ் மொழியின் பெருமை அதன் தொன்மையில் இல்லை. மாறாக அதன் தொடர்ச்சியில்தான் இருக்கிறது” என்பதைத் தனதுரையில் மேற்கோள் காட்டி நினைவுபடுத்திய முத்து நெடுமாறன், அதற்கேற்ப அனைவரும் தமிழ் மொழியைத் தொடர்ந்து தொழில்நுட்ப வளர்ச்சிகளின் துணையோடு அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

“தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி உலகை மிகவும் சுருக்கி விட்டது. சிறியதாக்கி விட்டது. நாம் இருக்கின்ற இடத்தில் அமர்ந்து கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு, உலகம் முழுமையிலும் கண்டங்களைத் தாண்டி, நேரவித்தியாசங்களைக் கடந்து மற்றவர்களோடு தொடர்பு கொள்ள முடியும் என்ற சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது. உலகின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் பள்ளிகள் கரம் கோர்த்து, அங்கு பயிலும் அடுத்த தலைமுறையினரிடத்தில் தமிழ்க் கல்வியை இணையம் வழியான பரிமாற்றங்கள் மூலம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது உண்மையில் நம் கண்முன்னே இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் பாராட்டத்தக்க, மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய முயற்சி” என முத்து நெடுமாறன் பாராட்டினார்.

“இந்த நிகழ்ச்சியின் போது, இலண்டனில் உள்ள மாணவர்களும், பீடோரில் உள்ள மாணவர்களும், தங்களுக்கிடையில் கலந்துரையாடியதையும், ஒருவருக்கொருவர் கேள்விகள் கேட்டுக் கொண்டு, அதற்குரிய பதில்களைப் பெற்றதையும் கண்டோம். அவரவர் நாட்டைப் பற்றியும் அங்கு தமிழ் மொழி குறித்தும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டதையும் கண்டோம். அந்த இரு தரப்பு மாணவர்களிடத்திலும் பல பொதுவான அம்சங்கள் இருப்பதையும் நாம் கண்டோம். ஒரு மிகப்பெரிய பயணத்திற்கு இது ஒரு நல்ல தொடக்கமாகும். இதன் மூலம் அவர்கள் தங்களுக்கிடையிலான நட்பை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதோடு, தமிழ் மொழியை உலக அளவில் வளர்ப்பதற்கும், தமிழ் மொழியின் மூலம் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்” எனவும் முத்து நெடுமாறன் தனதுரையில் குறிப்பிட்டார்.

இந்த முன்னுதாரணத்தைக் கொண்டு, மேலும் பல மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் அயல் நாடுகளில் உள்ள தமிழைக் கற்பிக்கும் பள்ளிகள், மையங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழ்க் கல்வி மீதான பரிமாற்றங்களை, இணையத் தொழில்நுட்பங்களின் மூலம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-செல்லியல் தொகுப்பு