Home நாடு கொத்தடிமைகளாகத் தமிழர்கள் : வேதமூர்த்தி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்!

கொத்தடிமைகளாகத் தமிழர்கள் : வேதமூர்த்தி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்!

1481
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 48 தமிழகத்துத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக சிக்கிக் கொண்டு பரிதவிக்கிறார்கள் என்ற காணொளி பகிரப்பட்டு சமூக ஊடங்களில் உலா வரத் தொடங்கியவுடன், உடனடியாக அதனைத் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, இது குறித்து யாருக்காவது தகவல்கள் தெரிந்தால் உடனடியாகத் தனது அரசியல் செயலாளர் பி.முனியாண்டியைத் தொடர்பு கொள்ளலாம் எனப் பதிவிட்டு, தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, வேதமூர்த்தியின் அரசியல் செயலாளர் முனியாண்டி கெடா மாநிலத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் ஒன்றைச் செய்துள்ளார். தமிழகத் தொழிலாளர்கள் கூறியுள்ள புகார் உண்மையென்றால் அது நமது நாட்டின் கௌரவத்தைப் பாதிப்பதாக இருக்கிறது என்றும், சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது என்றும் கூறி காவல் துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் முனியாண்டி கேட்டுக் கொண்டிருந்தார்.

வேதமூர்த்தியின் அரசியல் செயலாளர் செய்திருக்கும் காவல் துறை புகார்

இதைத் தொடர்ந்து குடிநுழைவுத் துறை இந்தப் புகார் தொடர்பில் விசாரணைகளைத் தொடங்கியிருப்பதாக குடிநுழைவுத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அந்த காணொளி குறித்த விசாரணைகளைக் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர்  உடனடியாகத் தொடக்கியுள்ளனர் என்றும் அந்த செய்தி மேலும் தெரிவித்தது.

48 தமிழகத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகச் சிக்கிக் கொண்டுள்ள விவகாரம், தமிழக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தத் தொழிலாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது.

அவர்கள் குறித்த செய்திகளை சில தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பத் தொடங்கியிருக்கின்றன.