Home நாடு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் – காமாட்சி துரைராஜூ

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனர் – காமாட்சி துரைராஜூ

1350
0
SHARE
Ad
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் காமாட்சி துரைராஜூ

கோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் காட்டுப் பகுதியில் ஏறத்தாழ 48 தமிழர்கள் – தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வேலைக்கு வந்தவர்கள் – சிக்கிக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து விட்டதாகவும் அவர்கள் பாதுகாப்புடன் இருப்பதாகவும், பெந்தோங், சபாய் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ தனது முகநூலில் பதிவிட்ட காணொளி ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறார்.

அந்தத் தொழிலாளர்கள் பெந்தோங் வட்டாரத்தில்தான் கொத்தடிமைகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் முதலாளி கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பத்துமலை ஆலயத்தில்  வைக்கப்பட்டிருப்பதாகவும் மலேசியாகினி வெளியிட்ட செய்தி குறிப்பிடுகிறது.

மனித வள அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், காவல் துறை, மனிதக் கடத்தல் எதிரான மன்றம், குடிநுழைவுத் துறை ஆகிய துறைகளின் 12 புலனாய்வு அதிகாரிகள் அதிரடியாகக் களமிறங்கி இந்த விவகாரத்தைக் கையாண்டனர் எனக் கூறப்பட்டுள்ளது.

பத்துமலை வளாகத்தில் உள்ள தொழிலாளர்களுடன் இந்தியத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரும் உடனிருந்து நிலைமைகளைக் கண்காணித்து வருகிறார்.

மாதத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்ற உறுதி மொழியோடு தாங்கள் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் ஆனால் முதல் மாத சம்பளம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்தத் தொழிலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தங்களின் அனைத்துலகக் கடப்பிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் தங்களின் முதலாளி கைப்பற்றி வைத்துக் கொண்டார் என்றும் அந்தத் தொழிலாளர்கள் புகார் கூறியிருக்கின்றனர்.

பெந்தோங் கம்போங் செமாங் என்ற இடத்தில் அதிக சக்தி வாய்ந்த மின்சாரக் கம்பிகளைப் பொருத்தும் பணிகளுக்காக இவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டதாகவும் அந்தத் தொழிலாளர்கள் கூறியிருக்கின்றனர்.

ஒரு குழு தங்களின் அனைத்துலகக் கடப்பிதழ்களைப் பிடுங்கி வைத்துக் கொண்டு முறையான உணவு, தண்ணீர் வழங்காமல் கொடுமைப் படுத்தி வருவதாக ஒருவர் செல்பேசி மூலமான காணொளி மூலம் தெரிவிக்க அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இதைத் தொடர்ந்து மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மனித வள அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்க, இந்தத் தொழிலாளர்களின் விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக காமாட்சி துரைராஜூ தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், 48 தமிழகத்துத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக சிக்கிக் கொண்டு பரிதவிக்கிறார்கள் என்ற காணொளி பகிரப்பட்டு சமூக ஊடங்களில் உலா வரத் தொடங்கியவுடன், உடனடியாக அதனைத் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி, இது குறித்து யாருக்காவது தகவல்கள் தெரிந்தால் உடனடியாகத் தனது அரசியல் செயலாளர் பி.முனியாண்டியைத் தொடர்பு கொள்ளலாம் எனப் பதிவிட்டு, தொடர்பு கொள்ள வேண்டிய செல்பேசி எண்ணையும் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, வேதமூர்த்தியின் அரசியல் செயலாளர் முனியாண்டி கெடா மாநிலத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் ஒன்றைச் செய்துள்ளார்.

குடிநுழைவுத் துறை இந்தப் புகார் தொடர்பில் விசாரணைகளைத் தொடங்கியிருப்பதாக குடிநுழைவுத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.