சென்னை – சர்கார் படவிவகாரத்தில், புதிய திருப்பமாக, நடிகர் விஜய், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனினும், பழனிசாமி அவரைச் சந்திக்க இதுவரையில் நேரம் ஒதுக்கவில்லை.
தமிழக முதல்வரைச் சந்திப்பதன் மூலம் சர்கார் படவிவகாரத்தினால் எழுந்திருக்கும் வெப்பத்தைத் தணிக்க முடியும் என விஜய் கருதியிருக்கிறார் எனத் தெரிகிறது.
இதற்கிடையில், முன்னெச்சரிக்கை ஏற்பாடாக, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை (முன் ஜாமீன்) கோரி மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
அந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விஜய்யின் பதாகைகளையும், சர்கார் படப் பதாகைகளையும் கிழிக்கும் போராட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
படத்தைத் திரையிடக் கூடாது என திரையரங்குகளுக்கு சென்று அதிமுகவினர் நடத்தும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சர்ச்சைக்குரிய காட்சிகள் சர்கார் படத்திலிருந்து நீக்கப்படும் என்றும், கோமளவல்லி என்ற பெயர் குறிப்பிடப்படும் இடங்களில் எல்லாம், ஒலியிழப்பு செய்யப்படும் என்றும் படக்குழு சார்பாக திரையரங்குகளுக்கான சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களின் தாக்கம் சற்றே குறைந்திருக்கிறது என்றாலும், இன்று திரையிடப்பட்ட சர்கார் படத்தின் காலைக் காட்சிகளில் சர்ச்சைக்குரிய காட்சிகள் தொடர்ந்து இடம் பெற்றன என்றும் புகார்கள் எழுந்துள்ளன.