Home நாடு வல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி

வல்லினம் விழா: “இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது” – விஜயலட்சுமி

2078
0
SHARE
Ad
கே.எஸ்.மணியம் சிறுகதைகள் நூலின் மொழிபெயர்ப்பாளர் விஜயலட்சுமி

(மலேசியாவில் தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கி வரும் வல்லினம் குழுமத்தின் கலை இலக்கிய விழா 10 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, 10 நூல்கள் வெளியீடு காண்கின்றன. அவற்றில் ஒன்று விஜயலட்சுமியின் மொழிப்பெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு நூலான “கே.எஸ்.மணியத்தின் சிறுகதைகள்” நூல். புலம்பெயர் தமிழர் வாழ்வின் அபத்தங்கள், குறைபாடுகள், தனிமனித, தேசிய அடையாள உருவாக்கத்தின் தேக்கம், மேலும் பலவித சர்ச்சைக்குறிய விடயங்களுக்கு இலக்கியவுரு கொடுப்பவர் கே.எஸ்.மணியம். தென்னாசியாவின் புலப்பெயர்வு (South Asian diaspora) வரலாற்றுப் பதிவுகளாக இதுவரை தமிழர்கள் கடந்து வந்திருக்கும் பாதையையும் இனி செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் பேசும் கே.எஸ். மணியத்தின் ஆங்கிலப் படைப்புகள் முதன் முறையாக விஜயலட்சுமியின் மொழிப் பெயர்ப்பில் தமிழில் வெளிவருகிறது. அதனை முன்னிட்டு விஜயலட்சுமியிடம் அவரது மொழிப்பெயர்ப்புத் தொகுப்பு குறித்து வல்லினம் சார்பில் கங்கா துரை நடத்திய நேர்காணல் இது)

கேள்வி: இதுவரை நூலகவியல் மற்றும் அறிவுதுறை சார்ந்த கட்டுரைகளை மட்டுமே எழுதிய நீங்கள் மொழிப்பெயர்ப்பு முயற்சியில் இயங்க காரணமென்ன?

விஜயலட்சுமி: நூலகராக இருப்பதாலேயே மொழிப்பெயர்ப்பின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது எனலாம். தமிழகத்தில் நடக்கும் மொழிப்பெயர்ப்பு முயற்சிகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதுபோன்ற நூல்களைத் தொடர்ந்து நான் பணிபுரியும் நூலகத்தில் சேமிக்கிறேன். அந்தத் தேசத்தின் பன்மொழி இலக்கியங்கள், மொழிப்பெயர்ப்பின் மூலம் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. தனிநபர் முயற்சிகளும் பதிப்பகங்களின் ஊக்குவிப்பும் சாகித்திய அகாதமி போன்ற அமைப்புகளின் முன்னெடுப்பும் இந்தியா எனும் நாட்டின் பல்லின மக்களின் வாழ்வியலையும் உளவியலையும் இலக்கியம் வழி கடத்த உதவுகிறது. நம் நாட்டில் அவ்வாறான பெரும் முயற்சிகள் இல்லாதபோது வல்லினம் போன்ற பதிப்பகங்களின் ஊக்கம் வழியும் என் தனிப்பட்ட ஆர்வம் வழியும் மொழிப்பெயர்ப்பு முயற்சிகளை முன்னெடுக்க முடிகிறது.

#TamilSchoolmychoice

கேள்வி: இந்நாட்டில் இதை முதல் முயற்சி எனக்கொள்ளலாமா?

விஜயலட்சுமி: இதற்கு முன்னும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக முனைவர் கிருஷ்ணன் மணியம் 1980-1990களுக்குட்பட்ட காலங்களில் தொடர்ச்சியாக சில மலாய் மொழிப்பெயர்ப்பு சிறுகதைகளை நாளிதழில் பிரசுரமாக்கியுள்ளார். மலாய்க் கவிதைகளை மொழிப்பெயர்த்து இரு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் பா.அ. சிவம், முனைவர் எம்.ஏ. நுக்மான் ஆகியோர் மலாய்க் கவிதைகளை மொழிப்பெயர்த்து நூலுரு கொடுத்துள்ளனர். எழுத்தாளர் தினேசுவரி வல்லினம் இணையப் பக்கத்திலும், வல்லினம் வெளியீடாக வந்த பறை ஆய்விதழிலும் ஓரிரு மலாய் சிறுகதைகளை மொழிப்பெயர்த்துள்ளார். இதைத் தவிர வேறேதும் முயற்சிகள் நடைபெற்றதாக சான்றுகள் இல்லை.

கேள்வி: நீங்கள் மொழிப்பெயர்ப்புக்கு கே.எஸ் மணியத்தின் சிறுகதைகளைக் குறிப்பிட்டு தேர்வு செய்ததன் காரணம் என்ன?

விஜயலட்சுமி: இது சற்று மாறுபட்ட முயற்சிதான். சிலர் இதைத் தேவையற்ற முயற்சி என்றும் கூறலாம். இந்நாட்டுப் புனைவு எழுத்தாளர்கள் பலருக்குச் சுயத்தணிக்கை மனம் உள்ளது. ஒரு சிறுபான்மை மக்களிடம் இருக்க வேண்டிய தீப்பொறி இல்லாமல் அணைந்த நெருப்பாய் புகையை மட்டும் கக்கிக்கொண்டு உள்ளனர். அதற்கான அச்சத்தையும் பல ஜோடனையான சொற்கள் மூலம் மூடி மழுப்புகின்றனர். இவர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் எழுதும் கே.எஸ்.மணியம் எனக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறார். அவர் வேறு கலாச்சாரத்தின் வாழ்வைப் பேசவில்லை. அவர் ஆங்கில மொழியில் எழுதும் தமிழ் எழுத்தாளர். இன்னும் சொல்வதானால் மலேசியாவில் மற்ற தமிழ் எழுத்தாளருக்கு மேலாகவும் மலேசிய இந்தியர்களின் அவலங்களைக் கலை நுட்பத்துடன் எழுத்தில் பதிவு செய்தவர். நான் வாசித்தவரையில் இந்நாட்டு இந்தியர்கள் வாழ்வியலின் நுண்மையான பகுதிகளை அரசியல் விழிப்புணர்வுடன் கே.எஸ்.மணியம் பதிவு செய்த அளவுக்கு வேறு யாரும் செய்யவில்லை. அதே சமயம் ஒரு விரிவுரையாளராக அரசு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினாலும் அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்க எப்போதுமே தயக்கமும் அச்சமும் காட்டவில்லை. மலேசியத் தமிழ் புனைவிலக்கிய உலகில் இருக்கும் ஓர் இடைவெளியை கே.எஸ்.மணியம் வழி பூர்த்தி செய்ய முடியும் என நினைத்து அவரைத் தேர்வு செய்தேன். சமகால எழுத்தாளர்களாவது சுயத்தணிகையில் இருந்து மீண்டு வர அவரது சிறுகதைகள் உதவக்கூடும் எனும் நம்பிக்கையில் அவரை முன்னெடுத்துள்ளேன்.

கேள்வி: உங்கள் அனுபவத்தில் ஒரு மூலப்படைப்பில் உள்ள அழுத்தத்தை மொழிப்பெயர்ப்பு கொடுக்க முடியுமா?

விஜயலட்சுமி: திறன் பெற்ற பல படைப்பாளிகளும் அது சிரமம்தான் எனச்சொல்லும்போது, ஒரு கத்துக்குட்டியான என்னிடமும் அவ்வாறான ஒரு பதிலைத்தான் எதிர்பார்க்க முடியும். முடிந்தவரை அதன் ஆன்மா சிதையாமல் இருக்கவே முயன்றுள்ளேன்.

கேள்வி: கே.எஸ் மணியம் தன் கதைகளில் பல்வேறு படிமங்களை வைத்திருப்பதைக் காணமுடிகிறது. ஆகவே இக்கதைகளை மொழிப்பெயர்க்க உங்களுக்கு சிக்கல் இருந்ததா?

விஜயலட்சுமி: கே.எஸ்.மணியத்தின் ஆளுமையை அறிவதே அவர் உருவாக்கும் படிமங்களை அறியவும் உதவுகிறது. அதற்காக நான் அவரது நேர்காணல்கள், உரைகள், அவரது படைப்பு குறித்து இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் போன்றவற்றை தொடர்ந்து வாசித்தேன். நேரிலும் அவரைச் சந்தித்து உரையாடினேன். அதன் வழி அவர் எண்ணவோட்டங்கள் என்னவாகச் செயல்படுகிறது என அறிந்து கொண்டேன். அவர் உருவாக்கும் படிமங்களையும் கதைக்குள் இருக்கும் உள்மடிப்புகளையும் நுணுகி வாசித்து அறிகிறேன். ஆனால் அவர் கதைகளுக்குள் உருவாக்கும் அங்கதத்தை மொழிப்பெயர்ப்பதே எனக்கான சவால். நுண்மையான மொழி வழியாக ஒருவர் உருவாக்கும் அங்கதச் சுவையை அப்படியே இன்னொரு மொழிக்குள் கடத்துவது என்பது மிகச் சிரமமானது. அதன் தோல்வியை நான் ஒப்புக்கொள்கிறேன்.

கேள்வி: கே.எஸ் மணியம் தன் அரசியல் கருத்துகளைக் கதைகளில் நேரடியாகவே வைத்திருக்கிறார். ஒரு புனைவுக்கு இந்த வகையான அணுகுமுறை சரியானதா?

விஜயலட்சுமி: அவர் ஒரு குறிப்பிட்ட முறையில் கட்டுப்படுத்திக்கொண்ட எழுத்து நடையை, முறையைக் கொண்டிருக்கவில்லை. Sacrifice, Removal of Pasir Panjang என நீங்கள் சொன்னது போன்ற நேரடி அரசியல் கதைகள் இருந்தாலும் மிகப்பூடகமான மொழியில் எழுதப்பட்ட The pelanduk, Haunting the tiger, Arriving போன்ற பல கதைகளும் உள்ளன. நான் இத்தொகுப்பில் பலதரப்பட்ட மாதிரிகளைக் கொண்ட கதைகளையும் இணைத்துள்ளேன்.

கேள்வி: மலேசிய ஆங்கிலப் படைப்பாளிகளில் கே.எஸ் மணியத்தின் முக்கியத்துவம் தமிழ் வாசகர்களால் முன்னமே உணரப்பட்டதா?

விஜயலட்சுமி: கற்றவர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் அவரது புனைவுகள் குறித்த அறிமுகம் உண்டு. ‘புலி வேட்டை’ (Haunting the tiger), குடியேறிகள் (Arriving) போன்ற அவரது சிறுகதைகள் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டுள்ளன. ஆனால் சராசரி தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு அவரது ஆளுமையோ அவரது இலக்கிய முயற்சிகளோ தெரியவரவே இல்லை. இந்தத் தொகுப்பு அதை ஏற்படுத்தலாம். அதன் பொருட்டே அவர் நேர்காணல்களை இத்தொகுப்பில் இணைத்துள்ளதோடு அவர் புனைவுலகம் குறித்த விரிவான கட்டுரை ஒன்றையும் எழுதி இணைத்துள்ளேன்.

கேள்வி: மலேசியாவில் நவீன சமூகம் மும்மொழி ஆற்றல் பெற்றிருப்பதை நாம் அறிவோம். இச்சூழலில், இங்கே மொழிப்பெயர்ப்பு இலக்கியத்திற்குத் தேவை இருக்கிறதா?

விஜயலட்சுமி: தமிழ் இலக்கியம் மட்டுமே வாசிக்கும் திரள் ஒன்று இந்நாட்டில் உள்ளது. பல நல்ல எழுத்தாளர்கள் கூட இந்நாட்டுச் சூழலில் மலாய், சீனம், ஆங்கில இலக்கியச் சூழல்களில் என்ன நடக்கிறது என அறிவதே இல்லை. அடுத்து, மலேசிய பதிப்புச் சூழலில் மலாய், சீன, ஆங்கில இலக்கியங்கள் மறுபதிப்பு வருவது மிகக் குறைவு, இணைய வழியிலும் கே.எஸ். மணியம் போன்ற பல முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள் வாசிக்கக் கிடைப்பதில்லை. இந்தப் போதாமைகள் இருக்கும் வரை இதுபோன்ற முயற்சிகள் தேவைதான்.

கேள்வி: ‘துணைக்கால்’ அடுத்து, இது உங்களின் இரண்டாவது நூல் வெளிவரும் தருணம். உங்களுடைய எதிர்கால இலக்கியத் திட்டம் என்ன?

விஜயலட்சுமி: அப்படி எதையும் நான் வைத்துக்கொள்ளவில்லை. ‘துணைக்கால்’ நூலுக்கு முன்பே ‘தமிழ் மலேசியானா’ எனும் தலைப்பில் 1969க்குப் பின் மலேசியாவில் பதிப்பிக்கப்பட்ட பிரதிகளைச் சேகரித்து விவரண பட்டியலைத் தொகுக்கும் வேலையைத் தொடங்கினேன். அங்கிருந்துதான் ‘துணைக்கால்’, ‘பறை’ ஆய்விதழ் போன்றவற்றின் தேவையிருப்பதை உணர்ந்து, அதை நோக்கி பயணிக்க முடிந்தது. இப்படியாக ஒன்றிலிருந்து இன்னொன்று நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன். துணைக்காலுக்குப் பிறகு ‘வல்லினம் 100’ களஞ்சியத்துக்கு என்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறேன். கே.எஸ்.மணியம் சிறுகதைகளின் மொழிப்பெயர்ப்பு நீண்ட நாட்களாக தொடரப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது. இம்மொழிப்பெயர்ப்பின் வாயிலாக புனைவு எழுத்துடன் என்னை அதிகம் நெருக்கமாக்கிக் கொண்டதாக உணர்கிறேன். மொழிபெயர்ப்பைப் போல இந்நாட்டு தமிழ் இலக்கியச் சூழலில் நிரப்பப்படாத இடைவெளிகள் அதிகம். அதை நோக்கியே என் அடுத்தக்கட்டங்கள் இருக்கும். தொடர்ந்து இலக்கியச் சூழலில் இருப்பதை மட்டுமே இப்போது விரும்புகிறேன்.

குறிப்பு:

விஜயலட்சுமியின் நூலை வாங்க 18.11.2018இல் நடக்கும் வல்லினம் கலை இலக்கிய விழாவில் வாசகர்கள் கலந்துகொள்ளலாம்.

நிகழ்ச்சியின் விபரங்கள்:
நாள்: 18.11.2018 (ஞாயிறு)
இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலம்பூர்
நேரம்: மதியம் 2.00 – மாலை 5.30

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

  • வல்லினம் விழா: “எல்லாத் துறைகளிலும் விமர்சனம் தேவையாகிறது” – அ.பாண்டியன்