Home நாடு 212 மில்லியன் ரிங்கிட் கையூட்டு: ரோஸ்மாவின் செயலாளர் மீது குற்றச்சாட்டுகள்!

212 மில்லியன் ரிங்கிட் கையூட்டு: ரோஸ்மாவின் செயலாளர் மீது குற்றச்சாட்டுகள்!

1005
0
SHARE
Ad

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோரின் முன்னாள் சிறப்பு உதவியாளர் டத்தோ ரிசால் மன்சோர் (படம்) மீது 4 ஊழல் குற்றச்சாட்டுகள் இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன.

ரோஸ்மா மன்சோர் மீது கையூட்டு பெற்றதாக நீதிமன்றத்தில் தனியாக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்ட வேளையில், ரிசால் மீது 212.5 மில்லியன் கையூட்டை அவர் கோரியதாக குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. அதில் அவர் ரோஸ்மா சார்பிலும், தனது சார்பிலும் 5.5 மில்லியன் ரிங்கிட் ஜெப்பாக் ஹோல்டிங்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து பெற்றதாகவும், சரவாக் மாநிலத்திலுள்ள புறநகர் பள்ளிகளுக்கு சூரிய சக்தியிலான மின் ஆற்றல் வழங்கும் திட்டத்திற்காக இந்தப் பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாகவும் ரிசால் மீது சார்வு செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கைகள் விவரிக்கின்றன.

ஜெப்பாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு இந்தக் குத்தகை கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரோஸ்மா சார்பில் 187.5 மில்லியன் ரிங்கிட் கையூட்டு கோரியதற்காகவும், தனக்காக 25 மில்லியன் ரிங்கிட் கோரியதற்காகவும் அவர் மீது முதலாம், இரண்டாம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

#TamilSchoolmychoice

5 மில்லியன் ரிங்கிட்டை ரோஸ்மாவுக்காகப் பெற்றதற்காகவும், 5 இலட்சம் ரிங்கிட்டைத் தனக்காகப் பெற்றதற்காகவும் ரிசால் மீது சுமத்தப்பட்டிருக்கும் மூன்றாம், நான்காம் குற்றச்சாட்டுகள் விவரிக்கின்றன.

குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரிய அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகை (ஜாமீன்) நிர்ணயிக்கப்பட்டது.