Home நாடு ரோஸ்மா மன்சோர் 189 மில்லியன் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு

ரோஸ்மா மன்சோர் 189 மில்லியன் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு

1447
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் சரவாக் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு சூரிய சக்தியிலான மின்சக்தி வழங்கும் திட்டத்திற்காக 189 மில்லியன் ரிங்கிட் கையூட்டு (இலஞ்சம்) பெற்றதாக இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

முதல் குற்றச்சாட்டில் ரோஸ்மா 187.5 மில்லியன் ரிங்கிட் கையூட்டை 2016-ஆம் ஆண்டு, மார்ச் முதல் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புடைய குத்தகையின் 15 விழுக்காடு தரகுக் கட்டணமாகும். இந்தக் குத்தகை ஜெப்பாக் ஹோல்டிங்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைடி அபாங் சம்சுடினுக்கு வழங்கப்பட்டு அதற்காக இந்தப் பணத்தை ரோஸ்மாவுக்கு கையூட்டாகத் தந்தார் என்றும் குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

ரோஸ்மா மீது சுமத்தப்பட்டிருக்கும் இரண்டாவது குற்றச்சாட்டின்படி 7 செப்டம்பர் 2017-ஆம் நாள் அதே சைடி என்பவரிடமிருந்து 15 இலட்சம் ரிங்கிட்டைக் கையூட்டாகப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

குற்றச்சாட்டுகளை மறுத்து ரோஸ்மா விசாரணை கோரினார். அவருக்கு 1 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இன்று 5 இலட்சம் ரிங்கிட்டும், அடுத்த 7 நாட்களுக்குள் எஞ்சிய 5 இலட்சம் ரிங்கிட்டும் செலுத்தப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதி அறிவித்தார்.