Home நாடு “அந்தோணி லோக் மீது வழக்கு தொடுப்பேன்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்

“அந்தோணி லோக் மீது வழக்கு தொடுப்பேன்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்

1152
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் பிரமுகர்கள் வளாகத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகத் தன்மீது குற்றம் சாட்டியுள்ள போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மீது தான் வழக்கு தொடுக்கப் போவதாக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நியாயமில்லாத முறையில், ஊடகத் துறையினரால் தன் மீது “வழக்கு” நடத்தப்படுவதாகவும் இந்த விவகாரம் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்கள் மீது சமூக ஊடகங்களில் அவமரியாதையுடன் விமர்சிக்கப்படுவதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.

“கீழ்த்தரமான கருத்துகள் எங்கள் மீது சமூக ஊடகங்களில் சுமத்தப்படுகின்றன. ஓர் அரசியல் வாதியாகவும், நாடாளுமன்ற மேலவையின் தலைவராகவும் அவற்றையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள நான் தயார். ஆனால், எனது மகளையும், மனைவியையும் அவமரியாதை செய்தால், அந்த சிசிடிவி காணொளி பதிவை சமூக ஊடகத்தில் வெளியிட்டால், அதன் பின்விளைவுகள் என்ன என்பதை ஒரு தந்தை என்ற முறையில் அந்தோணி லோக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். நான் அந்தோணி லோக் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன். மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் காணொளியை அவர் பயன்படுத்தியிருக்கிறார். நாடாளுமன்ற மேலவைத் தலைவர் என்ற முறையில் என்னை அவமரியாதை செய்திருக்கிறார்” எனவும் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கூடியவிரைவில் அந்தோணி லோக் மீது அவதூறு (defamation) வழக்கைத் தான் தொடுக்கப் போவதாகவும் கூறிய விக்னேஸ்வரன், “லோக் அவரே குற்றம் சாட்டுகிறார். அவரே நீதிபதியாக இருந்து நான் குற்றம் இழைத்து விட்டதாக தீர்ப்பு சொல்கிறார். எனது குடும்பத்தின் கௌரவத்தை நான் நிலைநாட்ட நீதிமன்றத்தின் முடிவை நான் நாடுவேன்” என்றும் கூறியிருக்கிறார்.