
கூலிம் நவீன இலக்கியக் களம் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதன் உறுப்பினர்கள் பத்து பேர்தான். ஆனால் அதன் இலக்கியப் பங்களிப்பாக ஆண்டுதோறும் நூற்றூக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள், வாசகர்களை, இலக்கிய ஆர்வலர்களைக் கூட்டி நவீன இலக்கிய வளர்ச்சியை முன்னெடுக்கும் அரிய பணியை ஆற்றி வருகிறது.
ஆனால் அது எந்த ஊடக வெளிச்சத்தையும் இதுவரை பெற்றதில்லை. சிறு குழுவாக இயங்கியவரை அதற்கு ஊடக வெளிச்சம் தேவையில்லைதான், ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அது இலக்கியப் பெரு நிகழ்வாக உருவாகி வந்திருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் அதற்கு ஊடக விளம்பரம் தேவைப்படுகிறது.
நவீன இலக்கியத்துக்கு அவர்கள் பங்களிப்பு என்ன? மலேசியாவின் நவீன இலக்கிய வளர்ச்சிக்கு இந்தச் சிறிய குழுவின் செய்லபாடுகள் என்ன? என்பதே இந்த நேர்காணலின் நோக்கம்.
இந்த இலக்கிய குழுவின் தொடக்க கால நிறுவனராகவும் ஆலோசகராகவும் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியும், இதன் தலைவராக மலேசியாவின் பிரபல எழுத்தாளர் கோ.புண்ணியவானும் இயங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 23, 24, 25 தேதிகளில் நடைபெறவிருக்கும் இலக்கியக் கொண்டாட்டத்தை ஒட்டி கோ.புண்ணியவானிடம் ஒரு நேர்காணல் செய்து கூடுதல் விபரங்களைத் திரட்டினோம். அதன் தொடர்பாக ஹரிஸ்குமாருடனான அவரின் உரையாடலைச் செல்லியல் வாசகர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிடுகிறோம்.
ஹரி: இந்த நவீன இலக்கியக் களம் எப்போது துவங்கப்பட்டது? இதன் தொடக்கால செயல்பாடுகள் என்ன? ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கு மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்களைக் கூட்டி ஒரு மாபெரும் இலக்கிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருவது எப்படிச் சாத்தியமானது? என்பதை செல்லியல் வாசகர்களுக்காகச் சொல்ல முடியுமா?
புண்ணியவான்: இதற்கொரு கொஞ்சம் சுவாரஸ்யமான பின்னணி உண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நானும் பிரம்மானந்த சரஸ்வதி சுவாமியும் (படம்) இலக்கியம் சார்ந்து அடிக்கடி தொலைபேசி வழியாகவும் நேரடியாகவும் பேசுவோம். சுவாமியின் ஆன்மிகக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள் திரு.தமிழ்மாறன், திரு .குமாரசாமி, ஆசிரியர் நீண்டகால வாசகர் மணி ஜெகதீஸ், எழுத்தாளர் பாண்டியன், பாலமுருகன், ஆகியோரும் இலக்கியம் சார்ந்து தனித்தனியே சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் வாசித்த நூல்கள் கதைகள் தொடர்பாக பேசி வந்தோம்.
இதனை ஒரு கூடுகையாக சேர்ந்து ஒரு தொடர் உரையாடலை குழுமுறையில் நடத்தினால், இன்னும் விரிவான திறப்பை உண்டாக்க முடியும் எனத் தோன்றியது. ஒரு நல்ல நாளில் மாலை வேளையில், கூலிமில் இருக்கும் சுவாமியின் தியான ஆசிரமத்தில் குழுவாக அமர்ந்து நாங்கள் வாசித்த சில சிறுகதைகள் பற்றி விரிவாகவும் அவரவர் பார்வையை, விமர்சனத்தை வைத்தோம். அது மிகச் சுவாரசியமான தொடக்கமாக அமையவே, திங்கள்தோறும் ஒரு செவ்வாய்க்கிழமையில் இந்த உரையாடல் நிகழ்ந்து வருகிறது. இது இன்றைக்கு ஐந்தாவது ஆண்டைத் தொட்டிருக்கிறது. இந்தக் குழுவில் பின்னர், தினகரன் ஜெயமோகன், யுவராஜன், ஹரிஸ்குமார் இணைந்து கொண்டார்கள்.
ஹரி: மலேசியாவில் இவ்வாறான குறுங்குழு இலக்கிய உரையாடல் நடந்துள்ளதா?
புண்ணியவான்: தொண்ணூறுகளில் கோலாலம்பூரில் ‘அகம்’ என்ற குறுங்குழு இலக்கிய உரையாடலை நடத்தி வந்தது. டாக்டர் சண்முக சிவா, சை.பீர்முகம்மது, டாக்டர் கார்த்திகேசு, சாமி மூர்த்தி, பாதாசன், அரு.சு. ஜீவானந்தன், ஆகியோர் மாதந்தோறும் கூடிப் பேசினர். ஆனால் அது தொடர்ச்சியாக நடைபெறவில்லை. மலேசிய எழுத்தாளர் சங்கமும், பிற சின்னச் சின்னக் குழுக்களும் அவ்வப்போது, இது போன்ற கூடுகையில் ஆர்வம் காட்டின. ஆனால் இலக்கியவாதிகள் போதுமான ஆர்வம் காட்டாததால் அது தொடர்ச்சியாக நடைபெறவில்லை.
ஹரி: உங்கள் இலக்கியக் குழு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குழுமுறையிலான உரையாடலை நடத்திவருவது எப்படிச் சாத்தியமானது?
புண்ணியவான்: இதில் பங்குகொள்ளும் அனைவருமே தீவிர வாசகர்கள். தீவிரமாக வாசிப்பவர்களுக்குத் தாங்கள் வாசித்தவற்றை பிறரோடு பகிர்ந்துகொள்ளும் ஆவல் இயல்பாகவே இருக்கும். நாம் படித்தவற்றை அல்லது அறிந்தவற்றை பிறரோடு பகிர்ந்துகொண்டு அதே விடயம் பற்றி அவர்கள் கருத்து என்ன என்று உரையாடல் வழி மட்டுமே அறிவது மிகுந்த ஆர்வத்தை உண்டுபண்ணக் கூடியது. இந்தப் பரஸ்பரப் பகிர்வு ஓர் அறிவுத் தேடல். அறிவுத் தாகம் உள்ளவர்களுக்கு இலக்கியத்தில் உள்ளபடியே தீவிரத்தனம் இருக்கும். அது மங்கியிருந்தால் அறிவுசார்ந்த விடயம் நடைபெறாது. அறிவு என்றாலே அறிய விரும்புவது. மேலும் மேலும் அறிந்து மேலும் தெளிவடைவது. தெளிவுதான் தத்துவம் சார்ந்த இயங்குவதற்கான அடிப்படை. இலக்கியத்தைப் பொழுதுபோக்காகக் கருதும் எழுத்தாளர்களிடம் தீவிரம் இருக்காது.
நம் நாட்டில் பொழுதுபோக்கு இலக்கியவாதிகள்தான் நிறைந்து இருக்கிறார்கள். அவர்கள் யார் என்ன எழுதினாலும் இலக்கியம்தான் எனக் கருதுவார்கள். இலக்கியத்தைத் தட்டிப்பார்த்து தரம் அறியும் படைப்பாளர்களால் மட்டும் தீவிரமாக இயங்க முடியும். மேம்போக்காக இலக்கியத்தை கையில் எடுப்பவர்களால் இலக்கிய தர வகைமையில் வேறுபாடு காணமுடியாது. இன்னொன்று அவர்கள் படைப்பைப்பற்றி விமர்சனம் வைத்தால் அதனை ஏற்க மறுப்பார்கள். விமர்சனத்தை விரும்பாதவர்கள் தங்கள் குறையை ஒருபோதும் அறிய முடியாது. அப்படி அறிந்துகொள்ள முற்படாதவர்கள் எந்நாளும் தரமான இலக்கியத்தைப் படைக்கவோ அடையாளம் காணவோ முடியாது. சுய எழுத்தின் தரத்தையும் அறிந்துகொள்வதிலும் சிரமம் இருக்கும். அதனால் தீவிரமாக இயங்கும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இதில் தொடர்ந்து பங்காற்ற முடியும். இல்லையென்றால் தேரின் அச்சு முறிந்தால் தொடர்ந்து நகரமுடியாது நின்றுவிடுவது போல இவர்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்வார்கள். எங்கள் குழுவில்கூட இடையிடையே சிலர் கலந்துகொண்டு சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டார்கள். இவர்கள் நான் மேற்சொன்ன வகைமையினர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
ஹரி: சரி, இந்தச் சிறு குழு, சிறு குழுவாகத் தேங்கிப் போகாமல் மேலும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர்களை இணைத்து ஒரு பெரிய நிகழ்வாக நடத்த எது உந்தியது?

புண்ணியவான்: நாங்கள் அனைவருமே எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள். அவருடைய இணையத் தளத்தைத் தீவிரமாக வாசிப்பவர்கள். ஜெயமோகன் ஆண்டு தவறாமல் ஊட்டியில் நடத்திவரும் இலக்கிய முகாம் பற்றிய இலக்கியக் கட்டுரைகளை தவறாமல் வாசித்து வந்தோம் அவருடைய தளத்தில். அவை மிகத் தரமான இலக்கியச் சுவையோடு இருந்தது. கூர்மையான விமர்சனப் போக்கைக் முன்னெடுப்பதாக இருந்தது. எனவே இந்நிகழ்வில் நேரடியாகக் கலந்துகொண்டால் என்ன என்ற ஆர்வம் உண்டானது. நானும், சுவாமியும், யுவராஜனும் தொடர்ந்து மூன்றாண்டுகள் அதில் கலந்து கொண்டு இலக்கிய அறிவை மேலும் வளர்த்துக் கொண்டோம்.
இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்தினால் என்ன என்று தோன்றியது. இதுபற்றி கலந்து பேசினோம். அதன் நீட்சியாக ஜெயமோகனையே முதல் நிகழ்ச்சிக்கு அழைப்பதாகத் திட்டமிட்டு அந் நிகழ்ச்சியை 2016-இல் பினாங்கில் நடத்தினோம். அதில் முப்பதுபேர் கலந்துகொண்டனர். அது ஒன்றரை நாள் நிகழ்ச்சியாக நடந்தது. பங்குகொண்டவர்கள் அனைவருக்குமே அது பெரிய அறிவுத் திறப்பாக இருந்தது என்று சொன்னார்கள். அதன் தொடர்ச்சியாகக் கூலிமுக்கு அருகில் பிரம்ம வித்யாரண்யத்தில் உள்ள மலைச்சாரல் ஆசிரமத்தில் 2017-ஆம் ஆண்டு இரண்டாவது கூடலை நடத்தினோம்.
அதில் முந்தைய நிகழ்ச்சியைவிட அதிகமானோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கு சற்று அதிகமான ஆர்வலர்கள் இதில் பங்கெடுத்தனர். அவர்களில் பாதிப் பேர் கல்லூரி ஆசிரியர்கள். இவர்களைக் கலந்துகொள்ள ஆர்வமூட்டியவர்கள் விரிவுரையாளர் தமிழ்மாறனும், குமாரசாமியும். ஜெயமோகனும், அவர் வாசகர்கள் பத்துபேர் தமிழகத்திலிருந்து இதில் பங்கெடுத்தது எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக அமைந்தது. சிங்கப்பூரிலிருந்து ஆர்வலர்கள் சேர்ந்துகொண்டது அதனை ஓர் அனைத்துலக இலக்கியக் கொண்டாட்டமாக உருவெடுக்க வைத்துவிட்டது.

இந்த ஆண்டும் சுங்கைகோப் பிரம்ம வித்யாரண்யத்திலேயே நடத்துகிறோம். இரு மாபெரும் தமிழக ஆளுமைகள் இதில் முழுமையாக பங்களிப்பு செய்யவிருக்கிறார்கள். ஒருவர் நல்ல கதைசொல்லி, எழுத்தாளர், விமர்சகர், பவா செல்லதுரை, இன்னொருவர் புனைவெழுத்தாளர் சு. வேணுகோபால். இந்த இரு ஆளுமைகளும் தங்கள் படைப்பிலக்கிய அனுபவங்களையும் , இலக்கிய விமர்சனத்தையும், இலக்கியம் சார்ந்த கூடுதல் விடயங்களையும் முன்வைப்பார்கள். இவர்கள் இருவரையும் நிகழ்ச்சியில் நேரடியாகச் சந்தித்தும் பேசலாம். ஒவ்வொரு ஆண்டும் வல்லினம் நிகழ்ச்சி நடத்திய பின்னர் அதே வாரம் கூலிம் பிரம்ம வித்யாரணயத்தில் எங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவருகிறோம்.
ஹரி: கூலிம் நவீன இலக்கியக் களம் வழி வேறு என்னென்ன திட்டங்கள் வகுத்துள்ளீர்கள்.
புண்ணியவான்: இப்போதைக்கு கல்லூரி மாணவர்களே அதிகம் இந்த இலக்கியப் பெரு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார்கள். இவர்கள் இதன் வழி தங்களின் இலக்கிய ஆர்வம் மேலோங்குவதாகக் கூறுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளி மாணவர்களை இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கெடுக்க வைப்பதே எங்களுடைய முதல் நோக்கம். அவர்கள் கடந்து வந்த இந்தப் பதினோரு கல்வி ஆண்டுகளில் புனைக்கதைக்கான மொழி கூடிவந்திருக்கும் என்று கணிக்கலாம். இந்த மொழியை மேலும் மேம்பட வைக்கவும் தொடர்ந்து எழுத வைக்கவும் அவர்களைத் தீவிர வாசிப்புக்குள் கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறோம். தீவிரமாக வாசிப்பவர்கள் தீவிர எழுத்துப் படைப்புக்குள் வருவதற்கான முகாந்திரம் கிடைக்கும். எனவே இந்த இளம் வயதினரை நேரடியாக சந்தித்து ஆர்வத்தை உண்டுபண்ணத் திட்டங்கள் வகுத்து வருகிறோம். இதுபோக எங்கள் நிகழ்ச்சி குறித்து பதிவு செய்ய ஒரு வலைத்தளத்தையும் செய்ய ஏற்பாடு செய்துவருகிறோம். கூடிய விரைவில் இது இணையத்தில் வாசிக்கக் கிடைக்கும்.
ஹரி: இந்த நிகழ்ச்சி குறித்த விபரங்களைச் சொன்னால் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்வார்கள்.
புண்ணியவான்: கூலிம் நவீன இலக்கியத்தின் மூன்றாவது ஆண்டாக இலக்கிய நிகழ்ச்சி கூலிம், சுங்கைகோப் பிரம்ம வித்யாரணயத்தின் மலைச்சாரலில் நவம்பர் 23 இரவு தொடங்கி , 24 இல் முழு நாளும், 25 இல் பகல் உணவோடு முடிவுறும். 23-ஆம் நாள் இரவு 7 மணிக்கு பொது நிகழ்ச்சிக்கான நுழைவு இலவசம். இதில் அனவரும் கலந்துகொள்ளலாம். இந்த மலைச்சாரல் ஆஸ்ரமத்தில் 100 பேருக்கான தங்கும் வசதியும் ஒரு நாளைக்கு நான்கு வேளை உணவும் (சைவ உணவு) அளிக்கப்படும். பேராளர்களுக்கு 100 ரிங்கிட், 50 ரிங்கிட், 30 ரிங்கிட் என மூன்று வெவ்வேறு பிரிவினர்க்கான கட்டணம் விதிக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கு ரிங்கிட் 50, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரிங்கிட் 30 கட்டணமும், பிறருக்கு ரிங்கிட் 100 கட்டணமும் விதித்திருக்கிறோம்.
இப்போதே எண்பதுக்கு மேற்பட்டோர் பதிந்துள்ளனர். இன்னும் 20 பேருக்கு இடம் உண்டு. பங்கெடுக்க விரும்புபவர்கள் இந்த தொடர்பு எண்களோடு பதிந்துகொள்ளலாம். 100 பேருக்கு மேல் அங்கு தங்க இடம் இல்லை. விரைந்து அழைத்து பதிவை உறுதி படுத்திக்கொள்ளுதல் நன்று.
தொடர்பு எண்: கோ.புண்ணியவான்: 019-5584905
குமரசாமி: 013-431 5359
தமிழ்மாறன்: 019-5700751
சுவாமி: 016-4467924