கோலாலம்பூர் – சீ பீல்ட் மாரியம்மன் ஆலயத்தைக் காப்பாற்ற நீண்ட காலமாக நடத்தப்பட்டு வரும் போராட்டம் ஏறத்தாழ இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதா அல்லது மீண்டும் இழுத்தடிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சீ பீல்ட் ஆலய நடவடிக்கைக் குழுவின் தலைவர் சுவாமி இராமாஜி, சீ பீல்ட் ஆலயத்தை அங்கேயே நிலை நிறுத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடுக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாகத் தெரிவித்தார்.
அதே வேளையில், சீ பீல்ட் ஆலயம் அமைந்துள்ள நிலத்தின் மேம்பாட்டாளர், அந்த ஆலயத்தை அகற்றி அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான ஒருசார்பு (ex parte order) நீதிமன்ற உத்தரவு ஒன்றையும் பெற்றுள்ளார் என்ற அதிர்ச்சி தரும் தகவலையும் சுவாமி இராமாஜி இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
நேற்று நவம்பர் 23 தொடங்கி அடுத்துவரும் நாட்களில் காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணிக்குள்ளாக அந்த ஆலயத்தை மேம்பாட்டாளர் அகற்றிக் கொள்ள முடியும் என அந்த நீதிமன்ற உத்தரவு குறிப்பிடுகின்றது.
இதன் காரணமாக, நில மேம்பாட்டாளர் நவம்பர் 29-க்கு முன்பாக சீ பீல்ட் ஆலயத்தை உடைத்து அகற்றிவிடலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
சீ பீல்ட் ஆலய தரப்பினர் தொடுத்திருக்கும் வழக்கு நவம்பர் 29-ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் அதற்கு முன்பாக நில மேம்பாட்டாளர், ஆலயத்தை அகற்றுவதற்கான ஒருசார்பு நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கான அவசரம் என்ன என்றும் இராமாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியர்களையும், அவர்களின் சமய சுதந்திரத்தையும் மதிக்காமல் நில மேம்பாட்டாளர் நடந்து கொள்வதாகவும் இராமாஜி சாடினார்.
“பொதுத் தேர்தலுக்கு முன்பாக புதிய மலேசியா என்ற முழக்கத்தை முன்வைத்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களின் நலன்களுக்காக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆலயத்தைக் காப்பாற்ற வேண்டும். இன்று இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளாகவும், அமைச்சர்களாகவும் இருப்பவர்கள் – அன்று இந்திய சமூகத்தின் காவலர்களாகவும், போராளிகளாகவும் காட்டிக் கொண்டவர்கள் – இன்று கோழைத்தனமாக ஒதுங்கிக் கொண்டுள்ளார்கள். எதிர்க்கட்சிகளில் இருந்தபோது அவர்கள் பேசிய பேச்சுகளை அவர்கள் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்பது நல்லது” என்றும் இராமாஜி குறை கூறினார்.
இது ஓர் உணர்ச்சிபூர்வமான விவகாரம் என்பதால் நில மேம்பாட்டாளரின் நடவடிக்கைகள் கொந்தளிப்பையும், கண்டனங்களையும் இந்தியர்களிடையே உருவாக்கலாம் என்றும் இராமாஜி எச்சரித்தார்.
மாநில அரசாங்கம், நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான 1996 சட்டத்தைப் பயன்படுத்தி சர்ச்சைக்குரிய ஆலய நிலத்தை, பொதுமக்கள் நலனுக்கான காரணம் என்பதைக் காட்டிக் கையகப்படுத்தப்பட வேண்டும் என்றும் இராமாஜி வேண்டுகோள் விடுத்தார்.
இந்தப் பிரச்சனையை சுமுகமாகத் தீர்க்கும் வகையில் நில மேம்பாட்டாளருடன் தாங்கள் சந்திப்பு ஒன்றுக்கு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் மேம்பாட்டாளர்கள் இதுவரையில் தங்களைச் சந்திக்காமல் தவிர்த்து வருவது ஏன் என்றும் இராமாஜி கேள்வி எழுப்பினார்.
ஆலயத்தைக் காப்பாற்றும் நோக்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அகல் விளக்குகள் ஏந்தி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்றும் இராமாஜி அறிவித்துள்ளார்.
நில மேம்பாட்டாளரின் போக்கைக் கண்டித்து இன்று சனிக்கிழமை நவம்பர் 24-ஆம் தேதி இரவு 8.00 மணி தொடங்கி அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆலயத்தை இரவு பகலாக விழித்திருந்து காக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் இராமாஜி கூறியுள்ளார்.