Home நாடு “சிவராஜ் வெளியேற்றப்பட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” சாஹிட்

“சிவராஜ் வெளியேற்றப்பட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது” சாஹிட்

1096
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜ் நேற்று மக்களவை சபாநாயகரால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டது, மலேசிய அரசியல் சாசனத்துக்குப் புறம்பானது என தேசிய முன்னணி தலைவரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அமகமட் சாஹிட் ஹமிடி குறை கூறியுள்ளார்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டம் 50-வது பிரிவுக்கு எதிரானது இந்த நடவடிக்கை என்றும் சாஹிட் கூறியிருக்கிறார்.

தேர்தல் நீதிமன்றம் கேமரன் மலை தொகுதி முடிவுகளைச் செல்லாது என அறிவித்திருந்தாலும், சிவராஜ் அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதால், இன்னும் அவர் கேமரன் மலையின் அதிகாரபூர்வ நாடாளுமன்ற உறுப்பினர்தான் என்றும் அதனால் மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் செய்த முடிவு சரியல்ல என்றும் சாஹிட் வாதிட்டார்.

#TamilSchoolmychoice

நேற்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது, ஜெலுத்தோங் (ஜசெக) நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர், சிவராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக அவையில் அமர்ந்திருக்க முடியுமா, அவர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு பெற்றிருக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் முகமட் அரிப் “உங்களிடம் இடைக்காலத் தடையுத்தரவு இருக்கிறதா இல்லையா?” என சிவராஜிடம் கேள்வி எழுப்பினார்.

“அது குறித்து நான் வழக்கறிஞர்களிடம் கேட்க வேண்டும், நான் தொடர்ந்து நாடாளுமன்றம் வர சட்டம் இடம் தருகிறதா என்பது குறித்து நான் விசாரித்துத் தெரிந்து கொள்ளவில்லை. எனினும் மேல் முறையீடு செய்ய எனக்கு 14 நாட்கள் அவகாசம் இருக்கிறது” என சிவராஜ் கூறியதைத் தொடர்ந்து அவர் மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று விடுத்த அறிக்கையொன்றில் “சட்டம் 14 நாட்களில் மேல் முறையீடு செய்ய அவகாசம் தந்திருக்கிறது. மேலும் அந்த 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யாவிட்டால் மட்டுமே தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதி முடிவாகக் கருதப்படும். எனவே சிவராஜை வெளியேற்றியது சட்டத்துக்குப் புறம்பானது” என சாஹிட் தெரிவித்திருக்கிறார்.

எனவே, தேர்தல் சட்டவிதிகளின்படி சிவராஜ் மீண்டும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சாஹிட் சபாநாயகர் முகமட் அரிப்பைக் கேட்டுக் கொண்டுள்ளார்.