கோலாலம்பூர் – சீபீல்ட் ஆலயக் கலவரத்தில் காயமடைந்து நேற்று மரணமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் தொடர்பான வழக்கு இனி கொலைக் குற்றச்சாட்டாக வகைப்படுத்தப்படும் என சிலாங்கூர் காவல் துறையின் துணைத் தலைவர் டத்தோ அப்துல் ரஷிட் அப்துல் வகாப் அறிவித்துள்ளார்.
குற்றவியல் பிரிவு (பீனல் கோட்) 302-இன் கீழ் இனி அந்த வழக்கு விசாரிக்கப்படும். இதற்கு முன்னர் அந்த வழக்கு பிரிவு 307-இன் கீழ் கொலை முயற்சி என்ற பிரிவில் விசாரிக்கப்பட்டு வந்தது.
கடந்த நவம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற சீபீல்ட் கலவரத்தில் 24 வயதான முகமட் அடிப் கடுமையான காயங்களுக்கு இலக்கானார். நேற்று இரவு 9.41 மணியளவில் அவர் தேசிய இருதய மருத்துவமனையில் காலமானார்.