டத்தோ சிவராஜ் மீண்டும் கேமரன் மலையில் போட்டியிட முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியானவுடன் மஇகா வட்டாரங்களில் அவருக்குப் பதிலாக அங்கு போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து மஇகா நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றைச் சமர்ப்பிக்கும் என விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.
சரியான வேட்பாளர், கேமரன் மலை வாக்காளர்களைக் குறிப்பாக இந்திய வாக்காளர்களை ஈர்க்கக் கூடிய ஆற்றல், பாஸ் கட்சி இந்த முறை போட்டியிடாததால் அதன் மூலம் கிடைக்கும் சாதகங்கள் – என இவையனைத்தையும் ஒழுங்காக ஒருங்கிணைத்தால், கேமரன் மலையில் மீண்டும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கைக் குரல்கள் மஇகாவில் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.


இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர்) கேமரன் மலைக்கு வருகை தந்த மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரன் அங்கு தனது குழுவினருடன் பூர்வ குடி மக்களுடனான சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, அங்குள்ள மஇகா தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார் என கேமரன் மலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கேமரன் மலை மஇகாவினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர், அதற்கேற்ப யார் சிறந்த வேட்பாளராக இருப்பார் என விக்னேஸ்வரன் பரிசீலித்து வருகிறார் என்றும் அந்தப் பட்டியலில் தற்போது 5 பேர் இடம் பெற்றிருக்கின்றனர் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டத்தோ டி.முருகையா, ஏ.கே.இராமலிங்கம், டான்ஸ்ரீ எம்.இராமசாமி ஆகியோர் கேமரன் மலையில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர் எனத் தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது மஇகா மத்திய செயலவை உறுப்பினர்கள் டத்தோ என்.முனியாண்டி, டத்தோ கே.சுப்பிரமணியம் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாக ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
டத்தோ என்.முனியாண்டி
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பள்ளிகளுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்போம் என்ற பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய முனியாண்டி, அதன் காரணமாக, சிலாங்கூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரக் காரணமாக இருந்தார்.
கேமரன் மலையில் போட்டியிட அவரும் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், அவரது ஆதரவாளர்களும் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க தேசியத் தலைவரை வற்புறுத்தி வருவதாகவும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
டத்தோ கே.சுப்பிரமணியம்
மலேசிய நாமக்கல் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சுப்பிரமணியம், அதன் மூலம் கேமரன் மலையில் நெருக்கமான தொடர்புகளையும், நட்பு வட்டாரத்தையும் கொண்டிருப்பவர் என்ற காரணத்தால் அவருடைய பெயரும் தேசியத் தலைவரின் பரிசீலனைப் பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 12-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில் அடுத்த சில நாட்களில் மஇகா-தேசிய முன்னணியின் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பை தேசிய முன்னணி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.