திருவனந்தபுரம்: கடந்த புதன்கிழமை இரு பெண்கள் சபரிமலைக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தப் பின்னர், கேரளாவில், வன்முறை எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமுற்ற ஒருவர் மருத்துவமனையில் காலமானார். நேற்று (வியாழக்கிழமை) போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள் .
இது வரையிலும், 38 காவல் அதிகாரிகள் உட்பட 250 பேர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்றிரவு (வியாழக்கிழமை), 46 வயது நிரம்பிய இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் சபரிமலைக் கோயிலுக்குச் சென்றுள்ளதாகவும், மேலும் கோயில் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
கடந்த புதன்கிழமை இரண்டு பெண்கள் கோயிலில் நுழைந்த பின்னர், இந்து பாரம்பரியவாதிகள் மற்றும் ஆர்வலர்களும், நேற்று காவல் துறையினரோடு மோதினர்.
எதிர்ப்பாளர்கள் நெடுஞ்சாலைகளைத் தடுத்து, பல்வேறு பகுதிகளில் கடைகள் மற்றும் சந்தைகளை மூடினர். திருவனந்தபுரத்திலிருந்து இவ்விவகாரத்தைப் பதிய சபரிமலை வந்திருந்த பத்திரிகையாளர்கள் மீதும் பி.ஜே.பி தொண்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.