Home நாடு “ஹிஷாமுடினை தற்செயலாகச் சந்தித்தேன்” – அஸ்மின் விளக்கம்

“ஹிஷாமுடினை தற்செயலாகச் சந்தித்தேன்” – அஸ்மின் விளக்கம்

939
0
SHARE
Ad
அஸ்மின் – ஹிஷாமுடின் குடும்பத்தினர் மொரோக்கோவில் ஒன்றாக எடுத்த படம்

கோலாலம்பூர் – அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் குடும்பத்தினருடன் இணைந்து பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி குடும்பத்தினர்  ஒன்றாக மொரோக்கா நாட்டிற்கு விடுமுறை சென்றனர் என அண்மையக் காலமாக உலவி வந்த சர்ச்சைகளுக்கு அஸ்மின் அலி பதிலளித்துள்ளார்.

தங்களின் குடும்பத்தினருடன் தனியாக மொரோக்கோ சென்றதாகவும் அங்கே ஹிஷாமுடின் குடும்பத்தினரை மரகேஷ் என்ற இடத்தில் தற்செயலாக சந்தித்ததாகவும் கூறிய அஸ்மின் அங்கு வேறு பல மலேசியர்களையும் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“ஹிஷாமுடின் எனது நீண்ட கால நண்பர். பல வருடங்களுக்கு முன்பிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவரது குடும்பத்தினருடன் நான் மொரோக்கோ செல்லவில்லை. தற்செயலாகத்தான் அங்கே சந்தித்தேன். ஒரு சில தரப்புகள் கூறுவது போல் அவருடன் அரசியல் சந்திப்பு எதனையும் நடத்தவில்லை” என்றும் அஸ்மின் நேற்று பத்திரிக்கையாளர்களிடம், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் விளக்கினார்.

#TamilSchoolmychoice

அஸ்மின் குடும்பத்தினரும், ஹிஷாமுடின் குடும்பத்தினரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, அஸ்மினின் மகன் அமீர் “எங்களின் குடும்பங்கள் ஒன்றிணைந்தன” எனக் குறிப்பிட்டிருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கும், ஊகங்களுக்கும் வழிவகுத்த இந்த புகைப்படமும், இரு குடும்பங்களும் ஒன்றாக உணவருந்திக் கொண்டிருக்கும் காணொளியும் பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. எனினும் பின்னர் அந்தப் பதிவுகள் நீக்கப்பட்டன.

“நான் எதிர்கட்சியில் இருந்தபோதும் ஷங்ரிலா தங்கும் விடுதியில் நடந்த ஹிஷாமுடினின் மூத்த மகளின் திருமண வைபவத்தில் கலந்து கொண்டேன். அதில் கலந்து கொண்ட ஒரே எதிர்க்கட்சித் தலைவர் நான்தான். எனவே நாம் இன்னும் அரசியல் நாகரீகத்துடன் நடந்து கொள்ளவேண்டும். எப்போது நாங்கள் சந்தித்தாலும் அரசியல் குறித்துத்தான் பேசுவோம் எனக் கருதக்கூடாது” என்றும் அஸ்மின் விளக்கினார்.

அரசியலில் அனைவருடனும் நாட்டின் நலனுக்காக நட்புறவு பாராட்ட வேண்டும் என்றும் அஸ்மின் தெரிவித்தார்.