Home Photo News “கனியும் மணியும்” – ஊடாடுவதன் வழி அனைத்து வயதினருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி

“கனியும் மணியும்” – ஊடாடுவதன் வழி அனைத்து வயதினருக்கும் தமிழ் கற்பிக்கும் புதிய மின்னூல் செயலி

2727
0
SHARE
Ad

சிங்கப்பூர் – ஓலைச் சுவடிகளின் வழியே வளர்க்கப்பட்ட தமிழ் இன்று கணினி, கையடக்கக் கருவிகள் என நவீன தொழில் நுட்பத்தின் அனைத்துத் தளங்களிலும் தன் காலடித் தடத்தை ஆழப் பதித்து பீடு நடை போட்டு வருகின்றது.

எனினும் உலகம் முழுவதிலும், தமிழ் மொழியைக் கற்பதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலைகளைக் கொண்ட குழந்தைகளும், பதின்ம வயதினைக் கடந்த பின்னரும், தமிழ் கற்க ஆர்வம் கொண்டவர்களும், உலகம் எங்கும் பரவிக் கிடக்கின்றனர். இவர்களின் ஆவலையும், ஏக்கத்தையும் நிறைவேற்றும் வண்ணம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பெருந்திட்டத்தைத் தொடங்கியுள்ளனர் இருவர்:

கணினி உலகில் நன்கு அறிமுகமான கணிஞர் முத்து நெடுமாறனும், ஆ சிரியை கஸ்தூரி ராமலிங்கமும்!

“கனியும் மணியும்” மின்னூல் செயலியின் தோற்றுநர்கள் முத்து நெடுமாறன் – கஸ்தூரி இராமலிங்கம்
#TamilSchoolmychoice

இவர்களின் சிந்தனையிலும், தொழில் நுட்ப வடிவமைப்பிலும், தோன்றி இருக்கும் மின்னூல் செயலிதான் ‘கனியும் மணியும்’.

இந்தச் செயலியின் உள்ளடக்க உருவாக்கத்தில் மலேசியாவின் கவிஞர் ‘பாப்பாவின் பாவலர்’ முரசு நெடுமாறன், நல்லுரையாளராகச் செயல்பட்டு குழந்தைகளுக்கு ஏற்ற மொழி பயன்பாட்டை வடிவமைத்துள்ளார்.

கடந்த வாரம் (ஜனவரி 17) இந்த செயலி சிங்கப்பூரில் வெளியீடு கண்டது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் ‘குரோ மோமெண்டம்’ நிறுவனமும் இணைந்து, இந்தச் செயலியை முழுமையாக உருவாக்கி, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

தமிழ் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் எளிய முறையிலும் மகிழ்ச்சியான சூழலிலும் கற்றுக் கொள்ள ஊடாடும் படங்கள், அசையும் படங்கள், கலந்துரையாடல் என பல வேறுபட்டக் கோணங்களில் தமிழைக் கற்பிக்கும் இந்த மின்னூலின் முதல் பதிகையில் சிறுவர்களுக்கான 6 கதைகள் இடம் பெற்றுள்ளன.

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர்

இந்த மின்னூலை சிங்கை கல்வி அமைச்சில் செயல்படும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவரும், செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்ரம் நாயர் வெளியிட்டார்.

“இனிவரும் காலங்களில் தமிழ் மொழிக் கற்பதற்கு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளும், வளங்களும் முக்கியப் பங்காற்றும். கனியும் மணியும் போன்ற படைப்புகளின் மூலம் தமிழ் மொழியை என்றும் வாழும் மொழியாக நிலைத்திடச் செய்வோம்” என விக்ரம் நாயர் தனதுரையில் கூறினார்.

சிங்கப்பூரின் கேம்பல் லேன் சாலையில் நடைபெற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ‘கனியும் மணியும்’ என்ற இந்த மின்னூலை விக்ரம் நாயர் வெளியிட்டார்.

இச்செயலியை ஆப்பிள் கருவிகளுக்கான ஆப்ஸ்டோர் தளத்திலிருந்தும், அண்ட்ரோய்டு கருவிகளுக்கான தளமான கூகுள் ஸ்டோர்ஸ் தளத்திலிருந்தும் செல்பேசி மற்றும் ஐபேட் போன்ற கையடக்கக் கருவிகளின் சிங்கப்பூர் பயனர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் மொழியின் மீது வற்றாத ஈர்ப்பு கொண்டிருந்தாலும், தங்களின் பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தாலும் அதற்கான சூழலும், அதற்குத் தகுந்த கற்பிக்கும் திறன்கொண்ட ஆசிரியர்களும் அமைவதில்லை. இந்தக் குறையை நிறைவு செய்யும் நோக்கத்துடன் மூன்றாண்டு கால உழைப்பு, தொழில்நுட்ப சிந்தனையோடும் நவீனயுக இளம் சிறார்களின் கற்றல் திறன்களைக் கருத்தில் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது இந்த மின்னூல் செயலி.

இதன் மூலம் அடுத்த தலைமுறையினர் தங்களின் இல்லங்களிலிருந்தே தங்கள் சொந்த முயற்சியின் மூலம் எவ்வித சிரமங்களும் இன்றி, உற்சாகமான, எளிய முறையில் தமிழ் மொழியைக் கற்க முடியும்.

மேலும், தமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் பயன்பாடு குறைந்துபோன தமிழ் மொழியை மீட்டெடுத்து, மேலும் அதிக அளவில் பரவச் செய்யும் மகத்தான முயற்சியாகவும் ‘கனியும் மணியும்’ மின்னூல் செயலி திகழ்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சிகளும் படைக்கப்பட்டன. ‘கனியும், மணியும்’ மின்னூல் செயலி வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:-

-செல்லியல் தொகுப்பு