கோலாலம்பூர்: சரவாக் ரிப்போர்ட் ஆசிரியரான கிளேர் ரியூகாசல் பிரவுனுக்கு தாம் எந்தவித பணமும் கொடுக்கவில்லை என பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும், கிளேரின் வழக்கறிஞர் அமெரிக் சிங்கும் கூறுவது போல, தாமும், பாஸ் கட்சியும், கிளேருக்கு 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை கொடுக்கவில்லை என ஹாடி அவாங் உறுதியாகக் கூறினார்.
இந்த அவதூறானது, பாஸ் கட்சியை வீழ்த்தும் எண்ணத்தில் ஒரு சில கட்சிகளின் செயல்திட்டமாக இருக்கலாம் என ஹாடி கூறினார்.
இதற்கிடையே, இம்மாதம் 1-ஆம் தேதி, நீதிமன்றத்திற்கு வெளியே ஹாடி அவாங் தொடுத்த வழக்கை தீர்ப்பதற்கான உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, 1.4 மில்லியன் ரிங்கிட் பணத்தை அவர் தமக்கு செலுத்தியதாக கிளேர் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, அப்பணம் செலுத்தப்பட்ட காசோலையும் பொதுவில் பகிரப்பட்டது.