Home வணிகம்/தொழில் நுட்பம் எழுத்துரு வடிவமைப்பு: இலங்கை கருத்தரங்கில் கெர்ரி லியோனிதாஸ்

எழுத்துரு வடிவமைப்பு: இலங்கை கருத்தரங்கில் கெர்ரி லியோனிதாஸ்

1002
0
SHARE
Ad
நூற்றாண்டுக்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட எழுத்துருவியல் குறித்த நூல் பற்றி விளக்குகிறார் கெர்ரி லியோனிதாஸ்

கொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள மொராதுவா பல்கலைக் கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22 மார்ச்) தொடங்கிய எழுத்துரு மென்பொருள் வடிவமைப்பு, எழுத்துருவியல் பயன்பாடு மீதான இரண்டு நாள் கருத்தரங்கத்தில் எழுத்துருவியல் துறையில் முன்னோடியும், இந்தத் துறையில் சிறந்த நிபுணருமான கெர்ரி லியோனிதாஸ் கலந்து கொண்டு தனது கருத்துகளைப் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

கெர்ரி லியோனிதாஸ் பிரிட்டன் ரீடிங் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியரும் மற்றும் அனைத்துலக எழுத்துரு மன்றத்தின் தலைவருமாவார்.

மொராதுவா பல்கலைக் கழகத் துணைத் தலைவரின் தொடக்க உரையைத் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் கிகான் தாயஸ் வட்டார மொழிகள் மீதான முக்கியத்துவமும், கவனக் குவிப்பும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

யூனிகோடு அடிப்படையிலான முதல் எழுத்துரு உருவாக்கப் பட்டறை இலங்கையில் மலேசியக் கணினி நிபுணர் முத்து நெடுமாறனால் 2002-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதையும் கிகான் தாயஸ் தனதுரையில் நினைவு கூர்ந்தார்.

அனைத்துலக நிலையில் பல முக்கிய தொழில்நுட்ப அறிஞர்களும், வடிவமைப்பாளர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கருத்தரங்கில் மலேசியாவில் கணினி தொழில்நுட்ப வல்லுநர் முத்து நெடுமாறனும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

கருத்தரங்கில் உரையாற்றும் பேராசிரியர் கிகான் தாயஸ்
இந்திய, இந்தோசீன மொழிகளுக்கான எழுத்துரு வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் முத்து நெடுமாறன், முரசு அஞ்சல் மென்பொருளின் வடிவமைப்பாளர் என்பதோடு செல்லினம் குறுஞ்செயலியின் வடிவமைப்பாளரும் நிறுவனரும் ஆவார்.
மலேசியாவில் இருந்து, குறுஞ்செயலி (மொபைல் எப்) தொழில்நுட்பத் தளத்தில் வெளிவரும் ஒரே தமிழ் இணைய ஊடகமான ‘செல்லியல்’ மின்னூடகத்தின் நிறுவனரும் வடிவமைப்பாளருமான  முத்து நெடுமாறன், அனைத்துலக தொழில் நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்துப் பரிமாற்றங்கள் செய்வார்.

கருத்தரங்கில் பங்கு பெறும் நிபுணர்கள்:

  • கெர்ரி லியோனிதாஸ் – பிரிட்டன் ரீடிங் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் மற்றும் அனைத்துலக எழுத்துரு மன்றத்தின் தலைவர்
  • பூஜா சக்சேனா – இந்தியாவின் எழுத்துரு வடிவமைப்பாளர்
  • லலிண்ட்ரா நாணயக்காரா – வடிவமைப்புக்கான செயல் இயக்குநர், இலங்கை லியோ பர்னர்ட் நிறுவனம்
  • பதும் இகோடவாட்டா – எழுத்துரு வடிவமைப்பாளரான இவர் கருத்தரங்கின் நெறியாளராக செயல்படுவார்.
கருத்தரங்கின் பங்கேற்பாளர்கள்

இலங்கையின் மொராதுவா பல்கலைக் கழகத்தின் கட்டிடக் கலை வடிவமைப்பு ஆராய்ச்சிப் பிரிவு இந்த கருத்தரங்கை அனைத்துலக எழுத்துருவியல் மன்றத்துடன் சேர்ந்து நடத்துகிறது. அக்குரு கொலக்டிவ் (Akuru Collective), விளம்பரங்களுக்கான அனைத்துலகக் கழகத்தின் இலங்கைப் பிரிவு, அனைத்துலக எழுத்துரு மன்றம் ஆகிய அமைப்புகளும் மொராதுவா பல்கலைக் கழகத்துடன் இக்கருத்தரங்கை ஒட்டிய சிறப்புக் கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த மாநாடு குறித்த கூடுதல் தகவல்களைக் கீழ்க்காணும் இணைய இணைப்பில் காணலாம்:

https://workingseminars.atypi.org